‘இளையராஜா 75’ பாராட்டு விழா,மற்றும் இசை நிகழ்ச்சி சிறப்பான முறையில் நடைபெற்ற நிலையில் அதற்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுத்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை இன்று காலை தலைமைச் செயலகத்தில் சந்தித்து நடிகரும், தமிழ்த்திரைப்படத்தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவருமான விஷால் நன்றி தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த து பேசிய விஷால், ‘கடந்த 2, 3-ம் தேதிகளில் இளையராஜாவுக்கு மாபெரும் இசை நிகழ்ச்சி நடந்தது. அது வெற்றிகரமான முறையில் நடைபெற்றது. விழாவுக்கு முழு பாதுகாப்பு வழங்கியதற்காக நன்றி தெரிவிக்க முதல்வரைச் சந்தித்தேன்.சுமார் 25,000 பேர் கலந்துகொண்ட நிகழ்ச்சி அது. அதை அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் நடத்தியிருக்க முடியாது. இதற்கு நன்றிகூறிக் கடிதம் அளித்தோம். இளையராஜாவின் 1000 படங்கள் குறித்த புத்தகம் ஒன்றையும் அளித்தோம்.ஏற்கெனவே அரசிடம் அளித்த கோரிக்கை மனுக்களை மீண்டும் அளித்தோம். குறிப்பாக தமிழ்மொழிப் படங்களின் வெளியீட்டின்போது மற்ற மொழிப் படங்கள் வெளியாகின்றன. அப்போது தமிழ்ப் படங்களுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம்.நடிகர் பார்த்திபனின் முயற்சியால்தான் ஒரே மேடையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இளையராஜா பாட முடிந்தது. அவர் எடுத்த முயற்சியால்தான் இது சாத்தியமானது. ஜூலை முதல் வாரத்தில் நடிகர் சங்கக் கட்டிடத்தின் திறப்பு விழா இருக்கும். புதிய திரைப்படங்களை திருட்டுத்தனமாக வெளியிடும் தமிழ் ராக்கர்ஸை அழிப்பதற்கு நான் கடவுளாக நம்புகிற தமிழக அரசு நினைத்தால்மட்டுமே இது நடக்கும்” இவாறு அவர் கூறினார்.