மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி திரைப்படம் எடுக்க இயக்குனர்கள் ஏ.எல்.விஜய் ,பிரியதர்ஷினி,கவுதம்மேனன் ராம்கோபால் வர்மா உள்ளிட்ட முன்னணி இயக்குநர்கள் போட்டி போடும் நிலையில்,இந்த படத்திற்கு தடை கேட்டு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதி கல்யாணசுந்தரம் முன் விசாரணைக்கு வந்தது. ஜெ .தீபா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜெயலலிதாவின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் ஜெ.தீபாவுக்கு தெரியும் என்றும், படத்தில் அவருடைய கதாப்பாத்திரத்தையும் சேர்க்க வாய்ப்புள்ளதால், மனுதாரர் அனுமதி இல்லாமல் படங்கள் எடுக்க அனுமதிக்க கூடாது என வாதிட்டார்.
மேலும், இந்த கதையில் மனுதராரின் குடும்ப அந்தரங்கத்தை பாதிக்கும் வகையில் காட்சிகள் சித்தரிக்கப்படலாம் என்றும் அச்சம் தெரிவித்த தீபா தரப்பு வழக்கறிஞர், ஜெயலலிதாவின் கண்ணியத்திற்கு பாதிப்பில்லாமல் இந்த திரைக்கதைகள் எழுதப்பட்ட்டுள்ளனவா ? என்பதை சரிபார்க்க வேண்டிய அவசியமும் இருப்பதாக தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதி, இம்மனு தொடர்பாக நவம்பர் 14-ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு இயக்குனர்கள் ஏ.எல்.விஜய் மற்றும் கவுதம் மேனன் உள்ளிடோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணை நவம்பர் 14-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.