பாபநாசம் பட இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில், சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாகியுள்ள புதிய படத்தில் கார்த்தி முதன் முறையாக ஜோதிகாவுடன் இணைந்து நடித்துள்ளார். கார்த்தியின் அக்காவாக ஜோதிகா நடிக்கிறார்.
திரில்லர் கதையாக உருவாகும் இந்தப் படத்தில் நிகிலா விமல், சத்யராஜ், ஆன்சன் பால், இளவரசு, ஷரீஷ் பேரடி ஆகியோரும் நடிக்கிறார்கள்.இப் படத்தின் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிவடைந்து, இப்போது படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்,மற்றும் படத்தலைப்பை இன்று மாலை 6 மணிக்கு நடிகர் சூர்யா வெளியிட்டார்.
‘2006’ ஆம் ஆண்டு சீமான் இயக்கத்தில், மாதவன் நடிப்பில், வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ‘தம்பி’ படத்தின் தலைப்பே தற்போது, ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா, சத்யராஜ் நடிப்பில் உருவாகியுள்ள காமெடி த்ரில்லர் படத்திற்கு கிடைத்துள்ளது.
வியாகாம் 18 மற்றும் பேரலல் மைண்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப் படம் வரும் டிசம்பரில் வெளியாகிறது .லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்,கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘கைதி’ படம் மிகப் பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ள நிலையில், கார்த்தியும், ஜோதிகாவும் முதன் முதலாக இணைந்து நடித்துள்ள ‘தம்பி’ தமிழக ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.