பெரிய பழுவேட்டரையராக மலையாளநடிகர் லால்!
இயக்குனர் மணி ரத்னம் தனது கனவு படமாக அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக்கும் முயற்சியில் கடந்த சில வருடங்களாக தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
பிரமாண்ட படைப்பாக உருவாக உள்ள இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி,அமிதாப்பச்சன், ஐஸ்வர்யா ராய் பச்சன், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, பிரபு, ஜெயராம் உள்பட பலர் நடிக்கின்றனர். இதற்காக நடிகர்கள் அனைவரும் தாடி மற்றும் நீண்ட தலைமுடி என மாறி வருகிறார்கள்.
இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு வரும் டிசம்பர் 12 ஆம் தேதி முதல் தாய்லாந்தில் நடக்க உள்ளது. அங்கு முக்கிய காட்சிகள் படமாக்கப்படவுள்ளன.இந்நிலையில், இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் லால், சத்யராஜ் நடிக்க இருந்த, பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தெரிகிறது.
இது குறித்து நடிகர் லால் தனது சமூக வலைதளத்தில், பொன்னியின் செல்வன்’ படத்தில் நடிப்பதன் மூலம் மணிரத்னம் படத்தில் நடிக்கும் அவரது கனவு நனவாகி விட்டதாக குறிப்பிட்டுள்ளார். இதற்காக தாடி மற்றும் முறுக்கி விடப்பட்ட மீசை என மாறியுள்ள லால் தனது சமூக வலைதளபக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளதாவது,
“எனக்கு சுஹாசினியை தெரியும் என்பதால் , “எனது முழு திரையுலக வாழ்க்கையில் இயக்குனர் மணிரத்னத்திடம் மட்டுமே நான் பட வாய்ப்பு கேட்டுள்ளேன். இது பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது.இந்நிலையில், அவர் ஒரு முறை ‘கடல்’ படத்திற்காக, என்னை அழைத்து ஒரு கதாபாத்திரத்தை கொடுத்தார். துரதிர்ஷ்டவசமாக மற்ற படங்களில் நடித்து வந்ததால் என்னால் கால்ஷீட் ஒதுக்கி தர முடியவில்லை.
இதனால் அவரது பட வாய்ப்பை ஏற்க முடியவில்லை. இப்போது கனவு என் கனவு நினைவாகிறது. நான் ஒரு பழம்பெரும் சரித்திர வீரனாக நடிக்கிறேன்.அந்த கதாபாத்திரத்துக்காக குதிரை சவாரி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஒரு கனவு, இப்போது ஒரு உண்மை! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.