நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டங்கள் நட்டத்தி வரும் நிலையில், ‘‘நீட்’ தேர்வுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
இந்த ஆண்டில் நீட் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க நாளை (திங்கட்கிழமை) கடைசி நாள்.இந்த நிலையில், மருத்துவ கவுன்சில் மேற்கொண்ட சட்ட திருத்தத்துக்கு எதிராக தமிழக அரசு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் புதிதாக ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
தமிழக அரசின் சார்பில் அரசு வக்கீல் பா.வினோத் கன்னா தாக்கல் செய்த அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது,
“நாடு தழுவிய அளவில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வை கட்டாயமாக்கும் வகையில் மருத்துவ கவுன்சில் 2017 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் மேற்கொண்ட சட்ட திருத்தம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது. இது மாநில அரசின் அதிகார வரம்பில் தலையிடுவதாக உள்ளது.

இந்த நிலையில் மாணவர்களிடையே சம வாய்ப்பை மறுக்கும் வகையில் அமைந்துள்ள நீட் தேர்வை கட்டாயமாக்கி சட்ட திருத்தம் கொண்டு வந்து இருப்பது எதிர்மறையான விளைவுகளை மாநிலத்தில் ஏற்படுத்தும்.
எனவே நீட் தேர்வை கட்டாயமாக்கி இந்திய மருத்துவ கவுன்சில் மேற்கொண்ட சட்ட திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.
நீட் தேர்வு வேண்டாம் என்ற கோரிக்கையை முன்வைத்து தான் கடந்த 2010-ம் ஆண்டு முதல் வழக்குகள் தொடரப்பட்டு வந்தன. ஆனால் இப்போதுதான் நாட்டிலேயே முதல் முறையாக, நீட் தேர்வு கட்டாயம் என்று மருத்துவ கவுன்சில் மேற்கொண்ட சட்டத் திருத்தத்தை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. நீட் தேர்வுக்கு எதிராக திமுக உள்ளிட்ட தமிழக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்புக்குரல் கொடுத்து வரும் நிலையில்,தமிழக அரசின் இந்த திடீர் நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.