உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயில் எனஅழைக்கப்படும் தஞ்சை பிரகதீஸ்வரா் கோயிலின் குடமுழுக்கு விழா வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இந்த குடமுழுக்கு விழாவில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில்,தஞ்சாவூா் பெரியகோயில் குடமுழுக்கு பூஜைகளை தமிழில் தான் நடத்தவேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை தரப்பில், தஞ்சாவூா் பெரியகோயிலில் ஆகம விதியைப் பின்பற்றியே குடமுழுக்கு நடத்தப்படும் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் தஞ்சாவூா் பெரியகோயில் நிா்வாகத்தை எதிா்மனுதாரராகச் சோ்க்க உத்தரவிட்டு, இவ் வழக்கு விசாரணை வரும் ஜனவரி 27 -ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தஞ்சாவூா் பெரியகோயில் குடமுழுக்கு பூஜைகளைத் தமிழில் நடத்த வேண்டும் என்று கவிஞர் தாமரை கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் தனது முகநூலை பக்கத்தில் கூறியுள்ளதாவது,
தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும்.
தமிழகத்தின் வரலாற்று அடையாளங்களுள் ஒன்று, தமிழரின் புகழ்மிக்க கோயில்களில் ஒன்று, பெருமைமிகு சுற்றுலாத்தலம் தஞ்சைப் பெருவுடையார் கோயிலில், 2020-ல் நின்று கொண்டு ‘தமிழில் குடமுழுக்கு நடத்து’ என்று கெஞ்சிக் கொண்டிருப்பதே கேவலம்.
தஞ்சைக் கோயில் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் அனைத்துக் கோயில்களிலும் தமிழில் வழிபாடு, குடமுழுக்கு நடைபெறுவது இயல்பாக்கப்படவேண்டும்.
இவையெல்லாம் போராடிப் பெற வேண்டியவை அல்ல, தானியாக உரிமையாக வர வேண்டியவை.
தமிழக அரசே, போராட்டத்திற்கு இடம் தராமல், நீங்களே முன்வந்து தமிழில்தான் நடத்தப்படும் என அறிவித்து எங்கள் காதுகளில் தேன் பாய்ச்சுங்கள்.
பின்குறிப்பு: ‘தமிழில் நடத்த நாங்கள்தான் ஆணையிட்டோம்’ என்று அரசியல் செய்யவும் உங்களுக்கு வாய்ப்பு! எதற்கு அந்த வாய்ப்பை எதிர்க்கட்சிக்குக் கொடுக்க வேண்டும்? தேர்தல் வருகிறதல்லவா இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.