பெரிய பட்ஜெட் படங்களுக்கு போட்டி போட்டுக்கொண்டு விலையை ஏற்றி விடுவது விநியோகஸ்தர்கள்தான் என்கிற பேச்சு திரை உலகில் நிலவுகிறது. அவர்கள்தான் புதிதாக ஒரு தீர்மானம் போட்டு இருக்கிறார்கள். அவர்கள் சபை கூடி சில தீர்மானங்களை எடுத்திருக்கிறார்கள். அவையெல்லாம் முறையாக பின்பற்றப்படுமா என்பதுதான் கேள்விக்குறி!
“இனிவரும் காலங்களில் பெரிய பட்ஜெட் திரைப்படங்களை MG/Outrate அடிப்படையில் விநியோகம் செய்யும் சூழ்நிலை வரும் நிலையில் படத்தினை திரையிட்டு பார்க்காமல் வியாபாரம் செய்வது இல்லை என்று இரு தரப்பினரும் ஒரு மனதாக முடிவு செய்து இருக்கிறார்கள்.
“அப்படியெல்லாம் திரையிட்டுக்காட்ட முடியாது ” என்று தயாரிப்பாளர்கள் தரப்பு உறுதியாக நின்று அவர்களே சொந்தமாக ரிலீஸ் செய்கிற நிலை வருமானால் தியேட்டர்காரர்களை பகைத்துக் கொள்வார்களா விநியோகஸ்தர்கள்?
சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் டி.ராஜேந்தர் , செயலாளர் மன்னன் ஆகியோரும் , தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க பொது செயலாளர் பன்னீர்செல்வம் மற்றும் நிர்வாகிகளும் கலந்து கொண்ட கூட்டுக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
திரையரங்க நுழைவுக் கட்டணங்களுக்கான GST (12%) வரியுடன் கூடுதலாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு LBT (8%) கேளிக்கை வரி செலுத்துவதால் இது திரையரங்குகளுக்கு வரும் பார்வையாளர்களுக்கும் கூடுதல் சுமையாக அமைகிறது. ஆகையால் இரு தரப்பினரும் இணைந்து மேற்படி வரியினை (8%) முற்றிலும் ரத்து செய்ய தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அளிப்பது.
தர்பார் திரைப்படத்தினை விநியோகம் செய்த வகையில் எழுந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் விதத்தில் தற்போது திரையரங்கு உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் இணைந்து தர்பார் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா மற்றும் அந்த திரைப்படத்தில் பங்குபெற்ற நடிகர் மற்றும் இயக்குனர் அவர்களிடம் தார்மீக ரீதியில் அணுகி மேற்படி பிரச்சனை குறித்து பேசி சுமூக தீர்வு காண முடிவு செய்திருக்கிறார்களாம்.
நல்லது நடந்தால் நாட்டு மக்களுக்கு நல்லது.!