ரஜினிகாந்த் தனது கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில், நாளை காலை 10 மணிக்கு, தனது மக்கள் மன்ற அனைத்து மாவட்ட செயலாளர்களை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ள நிலையில், ரஜினிகாந்த், நடத்த உள்ள இந்த ஆலோசனைக் கூட்டம், பல வகைகளிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
ரஜினி அரசியலுக்கு வருவாரா?மாட்டாரா ? என்பதை தாண்டி ,தனது ரசிகர் மன்றத்தினர் சந்திப்பில், தமிழகத்தில் சிஸ்டம் கெட்டு விட்டது.அதை சரி செய்யணும். நான் அரசியலுக்கு வருவது உறுதி.தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவேன்.போருக்கு தயாராக இருங்க என முழங்கினார்.
தனது ரசிகர் மன்றத்தையும், ரஜினிமக்கள் மன்றமாக மாற்றி உறுப்பினர் சேர்க்கையிலும் தீவிரமாக பணியாற்ற உத்தரவும் போட்டார்.அப்பாடா, ஒரு வழியா ரஜினி அரசியலுக்கு வருகிறார் என அவரது ரசிகர்கள் சுறுசுறுப்புடன் களத்தில் இறங்கினர்.
இந்நிலையில் தமிழகத்தை பொறுத்தவரை பரபரப்பு அரசியலை மட்டுமே நம்பியுள்ள ரஜினி, தனது ஆரம்ப அரசியல் நடவடிக்கைகளை தொடங்கிவிட்டார் என்றே தெரிகிறது. தமிழகத்தில் நிலவும் பல பிரச்சனைகளைத் தாண்டி தான் மட்டுமே பேசப்படவேண்டும் என்பதில் உறுதியாக இருந்து வரும் ரஜினி , தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் முதல், கமலுடன் இணைவது மற்றும் சிஏஏ பிரச்சனை வரை, சர்ச்சையை ஏற்படுத்தும் என்பது தெரிந்தே அவ்வப்போது தனது கருத்துக்களை மீடியாக்களின் உதவியுடன் வெளியிட்டு அதில் வெற்றியும் கண்டு வருவதாக அவரது நெருங்கிய வட்டராம் தெரிவிக்கிறது.
தற்போது இஸ்லாமிய முக்கிய நிர்வாகிகளை சந்தித்து பேசி வருவதும் அத்தகைய ஒரு பார்முலா தான் என்கின்றனர்.இந் நிலையில் தனது அடுத்த கட்ட நிகழ்வாக நாளை மறுநாள் ரசிகர் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்திக்க உள்ளாராம்.இந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது, கட்சி செயல்பாடு, மாநாடு, கூட்டணியா, தனித்துப் போட்டியா என்பது உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து, ஆலோசிக்க வாய்ப்புள்ளது.
கட்சி பெயரையும் இறுதி செய்ய வாய்ப்பு இருக்கிறது.வரும் ஆகஸ்ட் மாதம் தனது புதிய பட அறிவிப்பு அல்லது,செப்டம்பரில் நடத்தப்போகும் மாநாட்டில் தனது கட்சி தொடக்கம் பற்றிய அறிவிப்பை வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது.ரஜினி பிற கட்சிகளுடன் அமைக்கப்போகும் கூட்டணி குறித்து பலரும் தங்களது கருத்துக்களை வெளியிட்டு வரும் நிலையில், ரஜினி தனித்து போட்டியிடவே முடிவு செய்யக்கூடும் என்கிறது நம்பத் தகுந்த வட்டாரம்.
வரும் செப்டம்பர் 2020 முதல் மார்ச் 2021 வரையிலான காலகட்டம்தான் ரஜினி நடத்தும் அரசியல் பரமபத வாழ்க்கையின் முக்கிய திருப்பங்களாக இருக்கும் என்கிறது போயஸ் கார்டன் வட்டராம்.