
திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறவர் அல்லு அர்ஜுன்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகும் புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். “புஷ்பா” என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் மூலம் அவர் முதன் முறையாக தமிழிலும் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
நேற்று அவரது 37 வது பிறந்த நாளில் இப் படத்தின் முதல் பார்வை வெளியானது.
தெலுங்கு திரையுலகில் பிரபல இயக்குனரான சுகுமார் இப்படத்தை இயக்குகிறார்.
இவர்களது கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படம் “புஷ்பா” . இக் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது தமிழ்,தெலுங்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.லாரி டிரைவராக வருகிறார். வில்லன் நம்ம ஊர் மக்கள் செல்வன் விஜயசேதுபதி.
இப்படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.ஶ்ரீமந்துடு, ஜனதா கேரஜ், ரங்கஸ்தலம் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை தயாரித்த மைத்திரி மூவி மேக்கர்ஸ் சார்பாக நவீன், ரவி இப்படத்தை தயாரிக்கின்றனர்.
பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். அல்லு அர்ஜுன் – சுகுமார் கூட்டணியில் உருவான ஆர்யா மற்றும் ஆர்யா 2 படத்திற்கு இவர் இசையமைத்த பாடல்கள் இன்றளவும் ரசிகர்களிடம் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.
போலந்து நாட்டை சேர்ந்த கியுபா இப்படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.
உலகளவில் அனைத்து திரைப்பட ரசிகர்களும் ரசிக்கும் வண்ணம் ஜனரஞ்சகமாக உருவாகும் இப்படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.












