தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கு மே மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக பலரும் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் சூழல் உருவாகியுள்ளது.தினக்கூலி பணியாளர்கள் வருமானமின்றி, அத்தியாவசியப் பொருட்களுக்கே மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நிதி திரட்டி வருகின்றன. அஜித் உள்ளிட்ட திரையுலக பிரமுகர்கள் பலரும் நிதியளித்து வருகின்றனர்.
இந்நிலையில்,கடந்த சில தினங்களுக்கு முன் நடிகர் ராகவா லாரன்ஸ், ‘சந்திரமுகி 2’ படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவித்தவர்,அப்படத்திற்காக வாங்கிய அட்வான்ஸ் தொகையில் பிரதமரின் நிதிக்கு,முதலமைச்சரின் நிதிக்கு, மாற்று திறனாளிகளுக்கு, பெப்சி தொழிலாளர்களுக்கு, தின கூலி ஊழியர்களுக்கு, நடன இயக்குனர்கள் சங்கத்திற்கு என மொத்தம் ரூ. 3 கோடி நிதியாக கொடுப்பதாக அதிரடியாக அறிவித்தார்.இதனிடையே, ஃபைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்கவுள்ள வேறொரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் லாரன்ஸ். அந்தச் சம்பளத்திலிருந்து தூய்மைப் பணியாளர்களுக்கு 25 லட்ச ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.
இது தொடர்பாக படத்தயாரிப்பாளர் ‘ 5 ஸ்டார்’ கதிரேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
“இன்று தமிழ்ப் புத்தாண்டு, நாம் அனைவரும் வீட்டில் இருக்கிறோம். இந்தத் தருணத்தில் மருத்துவர்களாக, செவிலியர்களாக, காவலர்களாக, தூய்மைப் பணியாளர்களாக, நமக்காகப் பணிபுரிந்து கொண்டிருக்கும் மனித உருவில் வாழும் கடவுள்களுக்கு வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று காலை ராகவா லாரன்ஸுக்கு புத்தாண்டு வாழ்த்து கூற தொலைபேசியில் அழைத்திருந்தேன். அப்போது அவர் பேசும்போது, “அண்ணா, நாம் வீட்டிற்கு வாங்கி வரும் அத்தியாவசியப் பொருட்களையே 12 மணி நேரம் வெளியில் வைக்கும் இச்சமயத்தில், நம் வீட்டுக் குப்பைகளை முகம் சுளிக்காமல் தினமும் எடுத்துச் செல்லும் தூய்மைப் பணியாளர்களுக்கு அடுத்து உதவி செய்ய விரும்புகிறேன் என்று சொன்னார்.
தாங்கள் எனக்குக் கொடுக்கவிருக்கும் சம்பளத் தொகையில் 25 லட்சம் ரூபாயை தூய்மைப் பணியாளர்களுக்கு, அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் சென்றடைய வழி செய்யுமாறும் கூறினார்”.
இத்தகைய நல்லுள்ளம் கொண்ட ராகவா லாரன்ஸுடன் இணைந்து பணிபுரிவதில் பெருமை கொள்கிறேன்.ஆகவே, ராகவா லாரன்ஸ் விருப்பப்படி 25 லட்சம் ரூபாயை தூய்மைப் பணியாளர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தவுள்ளோம்.
எனவே தூய்மைப் பணியாளர்கள் தங்களின் அடையாள அட்டை மற்றும் அடையாள அட்டையில் உள்ள நபரின் வங்கிக் கணக்கு எண் விவரங்களை கீழ்க்கண்ட எண்ணிற்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்புமாறும், இதற்கு ஊடக மற்றும் பத்திரிகைத் துறை நண்பர்கள் உதவுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.
வாட்ஸ் அப் எண்: 63824 81658″.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.