தமிழகம் முழுவதும் மே 7-ஆம் தேதி முதல் திறக்கப்பட்ட அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளையும் உடனடியாக மூட வேண்டும் .ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளைத் திறக்ககூடாது. ஒருவேளை பொது முடக்க காலத்தில் மதுபானங்களை விற்பனை செய்ய அரசு கொள்கை முடிவெடுத்தால், ஆன்லைன் வழியாக முன்பதிவு செய்பவா்களுக்கு வீடுகளுக்குச் சென்று மதுபாட்டில்களை விற்கும் முறையை மேற்கொள்ளலாம் என சென்னை உயா்நீதிமன்றம் நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்து இருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.’டாஸ்மாக்கை திறப்பது என்பது அரசின் கொள்கை முடிவு. எனவே அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது’ என தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மேல்முறையீட்டு மனுவில் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து நடிகரும் மக்கள்நீதிமய்யக்கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது சமூக வலைதளத்தில்,
“குடிகாரனுக்கு வாழ்க்கைப்பட்ட தமிழ் பெண்களின்
தாலிகளோடு, குடிக்காத தமிழர்களின் உயிரையும் பணயம்
வைத்து, சூதாட அனுமதி கேட்டு உச்ச நீதிமன்றம்
செல்லுமாம்
தமிழக அரசு.
எங்கும் வருவோம் உமைத் தடுக்க.
மக்கள் நீதியே வெல்லும்.” என பதிவிட்டுள்ளார்.மேலும் இவ்விவகாரம் தொடர்பாக’ மக்கள் நீதிமய்யக்கட்சி’யின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,
மக்கள் நீதி மய்யம் கட்சி, உயர்நீதி மன்றத்தில், மதுக்கடைகள் திறக்க பெற்ற தடையை எதிர்த்து, உச்ச நீதிமன்றம் செல்வதாக தமிழக அரசு அறிவித்த காரணத்தினால், நமது தலைவர் நம்மவர் உத்தரவின் பேரில், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஒருவேளை தமிழக அரசு நீதிமன்றத்தை அணுகினால், “நமது கருத்தையும் நீதிமன்றம் கேட்க வேண்டும்” என்பதே கேவியட் மனுவின் நோக்கமாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.