யாவரும் நலம், விஸ்வரூபம் உட்பட சில படங்களுக்கு இசை அமைத்துள்ள பின்னணி பாடகர் சங்கர் மகாதேவன், எஹசான் லாய் ஜோடி, இந்தியில் பல படங்களுக்கு இசை அமைத்துள்ளனர்.
சங்கர் மகாதேவன் தமிழ்,இந்தி உட்பட பல்வேறு மொழிகளில் தொடர்ந்து பாடி வருகிறார்.
இந்நிலையில், கொரோனா லாக் டவுன் நேரத்தில் தற்போது மகிழ்ச்சியான பாடல் என்ற தலைப்பில், தனிப் பாடல் ஓன்றை உருவாக்கியுள்ளார்.
இதை ஜாவேத் அக்தர் எழுதி உள்ளார்.
இது குறித்து சங்கர் மஹாதேவன் கூறுகையில், இந்த ‘இக்கட்டான சூழ் நிலையில், இசை மனதுக்கு மருந்தாகட்டும் என்று நினைக்கிறேன். சர்வதேச இசை தினத்தை முன்னிட்டு இரண்டு ஆன்லைன் நிகழ்ச்சிகளை நடத்துகிறேன். புதிய பாடல் ஒன்றை உருவாக்கி வருகிறோம். வீட்டில் என்னுடன் என் மகன்கள் சித்தார்த், சிவம் ஆகிய நாங்கள் மூவரும் புதிய பாடலை உருவாக்கியுள்ளோம் .இதற்கு ‘மகிழ்ச்சியான பாடல்’ என்று டைட்டில் வைத்துள்ளோம்.
அனைத்து கவலைகளில் இருந்தும் விடுபடுவது பற்றிய பாடல் இது. பாடலில் நேர்மறையான விஷயங்கள் மட்டுமே இருக்கும். இப்போது அதுதான் நமக்குத் தேவை. சுற்றியுள்ள கொரோனா நெருக்கடி மன உறுதியை குலைத்துவிட்டது. அதனால், மக்களிடம் வலிமையாக இருக்கச் சொல்கிறோம். அதைச் சொல்வதற்கு இசையை விட வேறு என்ன வழி இருக்கிறது? என்கிறார்