முடங்கிக் கிடந்தால் மூட்டுவலிதான் மிச்சம் என்று வீட்டுப்பெரிசுகள் சொல்வார்கள். வேலை வெட்டிக்குப்போகாமல் பொண்டாட்டி முந்தானையே கதி என்று திரிகிறவர்களுக்கு சொன்ன சொலவடையாக இருந்தாலும் மற்றவர்களுக்கும் பொருந்தித்தான் போகிறது.
ஆனால் கோவிட 19 ஊரடங்கு காலத்தில் அரசே மக்களை வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கத்தானே சொல்கிறது.கிட்டத்தட்ட 5 மாதம் ஆகிறது .வேலை இல்லை. திரை உலகை சேர்ந்தவர்கள் என்ன செய்ய முடியும்?
பழகிப்போன ரொமான்ஸ் வேலைகளை வீட்டில் செய்ய முடியுமா,மந்திரித்து விடமாட்டார்களா!
கடந்த இரண்டு மாதங்களில் திரையுலகைச் சேர்ந்த கவுதம்மேனன்,சாந்தனு பாக்யராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும், தங்கள் வீட்டில் இருந்தபடியே குறும்படங்களை வெளியிட்டது தெரிந்த சேதி தான்.
இந்நிலையில் இயக்குநர் அகத்தியனின் வாரிசு நடிகை விஜயலட்சுமி, அவரது கணவர் இயக்குனர் பெரோஸ் இணைந்து குறும்படம் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
‘வேக் அப்’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்தக் குறும்படம், கணவன் மனைவி தங்கள் குழந்தையுடன் வீட்டில் இருக்கும்போது நடக்கும் அமானுஷ்ய சம்பவங்கள் , முதுகுத் தண்டை சில்லிடச் செய்யும் திகிலுடன் படமாக்கப்பட்டிருக்கிறது.
இதில்,கணவன் மனைவியாக இயக்குனர் பெரோஸ் மற்றும் விஜயலட்சுமி நடிக்க, அவர்கள் குழந்தையாக நிலன் நடித்திருக்கிறார்.
ஒரு நிமிடம் 37 நொடிகள் ஓடும் இக்குறும்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இப்படம் குறித்து இயக்குநர் பெரோஸ் கூறியதாவது,”குறும்படம் ஒன்றை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம். அவ்வளவுதான். மற்றபடி இதற்கொரு முத்திரையிட்டு வகைப்படுத்த விரும்பவில்லை. ஐபோன் பயன்படுத்தி எங்கள் வீட்டிற்குள்ளையே படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கிறோம். டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால் குறும்படத்தை விரைவில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறோம்” என்கிறார்.