பிரபல தனியார் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்தி தொடர், கும்கும் பாக்யா. இதில் ஸ்ருதி ஜா, ஷபில் அலுவாலியா, முக்தா சப்பனேகர், கிருஷ்ணா கவுல் உட்பட பலநடிகர்,நடிகைகள் நடித்து வருகின்றனர். ரவீந்திரா கவுதம் இயக்கும் இந்த தொடரை ஏக்தா கபூர் தயாரித்து வருகிறார்.இத் தொடர் இந்தி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இது தொடரின் படப்பிடிப்பு, லாக்டவுன் காரணமாக கடந்த சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
கொரோனா வைரஸ் ஓரளவு கட்டுக்குள் வந்த பின், சில கட்டுப்பாடுகளுடன் படப்பிடிப்பை நடத்திக் கொள்ள மகாராஷ்டிர அரசு அனுமதி அளித்துள்ளது.இதையடுத்து சின்னத்திரை தொடர்களுக்கான படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கியுள்ளன. அரசு அனுமதித்த குறைந்த நபர்களை கொண்டு படப்பிடிப்புகள் நடந்து வருகின்றன.
மும்பை சாந்திவாலி பகுதியில், கில்லிக் நிக்ஸான் என்ற சினிமா ஸ்டூடியோவில்,பல டிவி தொடர்களுக்கான அரங்கங்கள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது. அங்கு, கும்கும் பாக்யா டி .வி.தொடருக்காகவும் அரங்கம் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்து வந்தது. இந்நிலையில், நேற்று இந்த அரங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அந்த தொடரின் முன்னணி நடிகர், நடிகைகள் அனைவரும் அலறியடித்துக்கொண்டு ஓடினர்.
இதன் அரங்கின் பக்கத்திலேயே மேலும் சில சீரியல் படப்பிடிப்புகளுக்கான அரங்குகளும் இருந்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உடனடியாக தீ அணைக்கப்பட்டது. மின் கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்பது தெரிய வந்துள்ளது.இந்த தீ விபத்தினால் சின்னத்திரை வட்டாரத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












