கடந்த 2012-ம் ஆண்டு ‘போடா போடி’ படத்தின் மூலம் சிம்புவுக்கு ஜோடியாக கதாநாயகியாக அறிமுகமானவர் வரலட்சுமி சரத்குமார். அப்படத்தை தொடர்ந்து பாலாவின் ‘தாரை தப்பட்டை’,புஷ்கர் காயத்ரியின் ‘விக்ரம் வேதா’, விஷாலின் ‘சண்டக்கோழி 2’, விஜய்யுடன் ‘சர்கார்’,தனுசுடன் ‘மாரி 2′ நீயா-2,டேனி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
தமிழ்த்திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் வரலட்சுமி சரத்குமார், கன்னிராசி,பாம்பன்,பிறந்தாள் பராசக்தி,கலர்ஸ்,யானை ஆகிய படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் வரலட்சுமி நடித்து வருகிறார்.
ஊரடங்கு காலத்தில் சொந்தமாக சிறிய அளவில் பேக்கரி பிசினஸ் தொடங்கிய வரலட்சுமி, அனைவரும் ஆச்சரியப் படும் வகையில்,தற்போது திரைப்பட இயக்குனராகவும் களமிறங்கியுள்ளார்.
மறைந்த இயக்குனர் ராமநாராயணனின் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் இப் படத்துக்கு ‘கண்ணாமூச்சி’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.இப்படத்தின் ஒளிப்பதிவை கிருஷ்ண சாமி கவனிக்க, சாம் சி.எஸ். இசையமைக்கிறார்.
வரலட்சுமி கதையின் நாயகியாக நடிக்கும் இப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதில் வரலட்சுமியே பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். திரைப்பட இயக்குநராகவும் களமிறங்கியுள்ள நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு திரையுலகினர் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். விரைவில் இப்படம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.