நடிகர் தனுஷ், வடசென்னை, அசுரன், பட்டாஸ் ஆகிய படங்களுக்குப் பிறகு, தற்போது தமிழில் கர்ணன் படத்திலும், இந்தியில், அட் ராங்கி ரே என்ற படத்திலும் நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு மதுரை மற்றும் காரைக்குடி பகுதிகளில் நடந்து வருகிறது.அதைத் தொடர்ந்து, நடிகர் தனுஷ், சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில், இரண்டு படங்களில் நடிக்கவுள்ளார்.
சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில், தனுஷ் தனது 43 ஆவது படமாக நடிக்க உள்ள இப் படத்தை, ‘துருவங்கள் பதினாறு’, ‘மாஃபியா’ ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்குகிறார்.ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார் என்கிற தகவல் ஏற்கனவே வெளியான நிலையில்,தற்போது இப் படத்தின் கதாநாயகி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை சத்யஜோதி பிலிம்ஸ் படநிறுவனம் அறிவித்துள்ளது
.இது குறித்து சத்யஜோதி ஃபிலிம்ஸ் டி. ஜி. தியாகராஜன் கூறியதாவது…வெகு சில நடிகைகளே குடும்ப பாங்கிலான நம் வீட்டு பெண் மற்றும் மாடர்ன் தோற்றம் என இரண்டிலும் அசத்தலாக இருப்பார்கள். அந்த வகையில் மாளவிகா மோகனன் இரண்டு தோற்றங்களிலும் மிக எளிதில் பொருந்துபவராக இருக்கிறார். எங்களின் அடுத்த தயாரிப்பான D43 க்காக மாளவிகா மோகனனை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறோம். தென்னிந்தியாவில் பல மொழி திரைப்படங்களிலும், அழுத்தமான பாத்திரங்களில் தோன்றி திறமையான நடிப்பை தந்து பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை இந்த இளம் வயதில் அவர் பெற்றிருப்பது பெரும் ஆச்சர்யம். அவரது பாத்திரம் இப்படத்திலும் கண்டிப்பாக ரசிகர்கள் கொண்டாடும் வகையில் இருக்கும்.
இப்படம் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட, ஆக்சனும் உணர்வுகளும் இரண்டறக்கலந்த அட்டகாசமான கமர்ஷியல் கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து வகையான ரசிகர்களும் கண்டிப்பாக இப்படத்தினை கொண்டாடுவார்கள் என உறுதியாக நம்புகிறேன். ஜீவி பிரகாஷ் தன் இசையால் ரசிகர்களின் மனதில் தனி இடம்பிடித்து, பெரும் சாதனைகள் செய்து வரும் நிலையில் அவரது இசை இப்படத்திற்கு பெரும் பலமாக இருக்கும். மிகத்திறமை வாய்ந்த தொழில்நுட்ப குழு படத்தில் இணைந்துள்ளது. இப்படக்குழு மிகச்சரியான படைப்பை தந்து, பெரு வெற்றியை பெற்றுத்தரும் என உறுதியாக நம்புகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.