தமிழ்த்திரையுலகில் தனுஷ் நடித்த ‘பொல்லாதவன்’ படத்தின் மூலம் ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் எஸ்.கதிரேசன் தயாரிப்பாளராகவும் ,வெற்றிமாறன் டைரக்டராகவும் அறிமுகமானார்கள். தொடர்ந்து எஸ்.கதிரேசன் மீண்டும் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ‘ஆடுகளம்’ படத்தையும் தயாரித்தார், இப்படம் 6 தேசிய விருதுகள் உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றது. மேலும் ‘நய்யாண்டி’,’ ஜிகர்தண்டா’ போன்ற பல படங்களைத் தயாரித்தார்.
இயக்குனர் வெற்றிமாறனும் ‘கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி’ தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி, ‘உதயம்’, ‘காக்காமுட்டை’, ‘விசாரணை’, ‘வட சென்னை’ போன்ற நல்ல படங்களைத் தயாரித்தார்.’காக்கா முட்டை’ தேசிய விருது உள்பட பல விருதுகளைப் பெற்றது. ‘விசாரணை’ தேசிய விருது பெற்றதுடன் அகடமி விருதுக்கு இந்தியாவின் சார்பில் அனுப்பப்படும் படமாகத் தேர்வானது.இருவருமே திரையுலகில் வெற்றியாளர்களாக வளம் வருகிறார்கள்.
இந்நிலையில்,கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இயக்குநர் வெற்றிமாறனும் ஃபைவ் ஸ்டார் எஸ்.கதிரேசனும் இணைகிறார்கள். இவர்கள் இருவரும் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்திற்கு வெற்றிமாறன் கதை ,திரைக்கதை எழுதுகிறார்.
படத்தின் இயக்குநர் மற்றும் நடிகர், நடிகைகள் விவரம் விரைவில் வெளியாகும் என்கிறது பட்டத்தரப்பு. இம்மூவர் கூட்டணியால் இன்னும் பெயரிடப்படாத இப் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.இதன் படப்பிடிப்பு 2021-ல் பொங்கலுக்குப் பின் தொடங்க உள்ளது.