தமிழில் 50க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் பல்வேறு வேடங்களில் நடித்துள்ளவர் நடிகர் தவசி .தேனி மாவட்டம் சங்கராபுரத்தை பூர்விகமாக கொண்ட இவர்,பாரதிராஜாவின் ‘கிழக்குச் சீமையிலே’ படத்தின் மூலமாக தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானார். தொடர்ந்து அழகர்சாமியின் குதிரை, கருப்பன் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், கொம்பன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்திலும் தவசி நடித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, நடிகர் தவசி, உணவுக் குழாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சரவணனுக்கு சொந்தமான மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.சில, தினங்களுக்கு முன் தனது சிகிச்சைக்கு போதிய பணமின்றி தவித்து வருவதாகவும் ரசிகர்களும் திரை உலகினரும் உதவ முன்வர வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.
மேலும், பெரிய மீசை தாடியுடன் கம்பீரமாக இருந்த தவசி வீடியோவில், புற்றுநோய் பாதிப்பால் மொட்டை அடிக்கப்பட்டு எலும்பும் தோலுமாக இருநத்தை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.நடிகர்கள் சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி, சூரி உள்ளிட்ட பலரும் அவருக்கு நிதியுதவி செய்தனர்.
இந்நிலையில் நடிகர் தவசியின் உடல் நிலை நேற்று திடீர் என மோசமடைந்தது. இதனை தொடர்ந்து சிகிச்சைப் பலனின்றி மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது. அவரது மறைவு திரைத்துறையினர் இடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.அவரது உடல், மருத்துவமனையில் இருந்து அவரது சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டம் மட்டப்பாறை கிராமத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு அவரது உடல் இன்று அடக்கம் செய்யப்பட உள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.