விஜய் மக்கள் இயக்கத்துக்கு தனி ‘யூடியூப்’ சேனல் !

 நடிகர் விஜய்யின், ‘அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ அவரது தந்தையால்  அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டதாக, கடந்த சில நாட்களுக்கு முன் செய்திகள் வெளியாயின.அதற்கு நடிகர் விஜய் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.அவர் தொடங்கியுள்ள கட்சிக்கும் எனக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எவ்வித தொடர்பும் இல்லை என திட்டவட்டமாக எனது ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். எனது ரசிகர்கள்,அக்கட்சியில் இணைத்துக் கொள்ளவோ கட்சி பணியாற்றவோ வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் என்று நடிகர் விஜய் கூறினார்.தொடர்ந்து எஸ்.ஏ.சந்திர சேகரின் ஆதரவாளர்கள் அதிரடியாக நீக்கப்பட்டு வேறு நிர்வாகிகள்  நியமிக்கப்பட்டனர்.இதையடுத்து எஸ்.ஏ.சந்திரசேகர், அந்த அரசியல் கட்சி முயற்சியை கைவிட்டார். இந்நிலையில், விஜய் மக்கள் இயக்க முக்கிய நிர்வாகிகள் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில்  ஒரு யூடியூப் சேனலை தொடங்க முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள்.இந்த யூடியூப் சேனல் வாயிலாக, நடிகர் விஜய் எடுக்கும் முடிவு மற்றும் அவர் தொடர்பான செய்திகளை வெளியிடவும் விஜய் மக்கள் இயக்கம் செய்யும் நற்பணிகளையும் வெளியிடத் திட்டமிடப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.