சமீபத்தில் நடந்து முடிந்த தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி அணியினர் பெரும்பான்மையான பதவிகளை கைப்பற்றினர். இவர்கள் அனைவரும் நாளை காலை (டிசம்பர் 2) பதவியேற்கவுள்ளனர்.சென்னை கலைவாணர் அரங்கில் அமைச்சர் கடம்பூர் ராஜு முன்னிலையில் இந்த விழா நடக்கவுள்ளது. இந்நிலையில் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் தலைவராக வெற்றிபெற்ற தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி மற்றும் வெற்றிபெற்ற நிர்வாகிகள்செயற்குழு உறுப்பினர்களுக்கு தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் இயக்குனர் பாரதிராஜா வாழ்த்து தெரிவித்துள்ளார் இது குறித்து பாரதிராஜா விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,
“தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு நீண்ட முடக்கத்திற்குப் பின் தேர்தல் நடைபெற்றதை வரவேற்கிறேன்.தயாரிப்பாளர்கள் இணைந்து ஓட்டளித்ததில் மகிழ்ச்சி. எப்போதும் நம்மை நாம் ஆள்வது அவசியம்.
அப்போதுதான் உள்ளவர்களின் தேவையை உணர்ந்து பணியாற்ற முடியும்.தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தைப் பொருத்தவரை நிறைய சவால்கள் முன் நிற்கின்றன.
இடைப்பட்ட காலங்களில் முடங்கிப் போன நிர்வாகம் சீரமைக்கப்பட்டு முடுக்கி விடப்பட வேண்டும். எனவே, தேர்தலில் வெற்றி பெற்ற குழு பணியாற்றக் கூடாது. தீவிர செயலாற்ற வேண்டும்.
திரு. முரளி இராம நாரயணன் அவர்களின் தலைமைக்கு வாழ்த்துகள். வெற்றி பெற்ற அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் எனது வாழ்த்துகள்.என்ன வாக்குறுதிகள் சொல்லி வந்தீர்களோ அவற்றை நிறைவேற்றப் போராடுங்கள். சங்கம் மீண்டும் துளிர்த்தெழட்டும்.
தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக வெற்றி பெற்ற உங்களனைவரையும் வாழ்த்தி மகிழ்கிறோம்”.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.