தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. அசாமில் 3 கட்டங்களாகவும், மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாகவும் தேர்தல் நடத்தப்பட்டது. மேற்கு வங்கத்தில் 4-ம் கட்ட தேர்தலின்போது துப்பாக்கிச் சூடு நடந்தது. இதைத் தவிர 5 மாநில தேர்தல்களும் அமைதியாக நடந்து முடிந்தன.
மின்னணு வாக்கு இயந்திரங்கள், அந்தந்த பகுதிகளில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுஉள்ளன.
தமிழகத்தை பொறுத்தவரை 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. அத்துடன் காலியாக உள்ள கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலும் நடந்தது.
சட்டப்பேரவைத் தொகுதிகளில் 3,998 வேட்பாளர்களும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் 12 வேட்பாளர்களும் போட்டியிட்டனர்.
மொத்தம் 88,937 வாக்குச்சாவடிகளில் நடந்த தேர்தலில் 72.81 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
தமிழக சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் நாளை மே மாதம் 2 ந்தேதி தமிழகம் முழுவதிலும் அமைக்கப்பட்டுள்ள 76 வாக்கு எண்ணிக்கை மையங்களில் எண்ணப்படுகின்றன.
முதலில் காலை 8 மணிக்கு தபால் வாக்குகளும், தொடர்ந்து 8.30 மணிக்கு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளும் எண்ணப்படுகின்றன.
ஒவ்வொரு சுற்றும் முடிந்த பிறகு அதற்கான முடிவுகள் அதிகாரப்பூர்வமாக திரையில் அறிவிக்கப்படும்.வாக்கு எண்ணிக்கை 15 சுற்றுகளில் இருந்து அதிகபட்சமாக 30 சுற்றுகள் வரை செல்லும் என கூறப்படுகிறது.
நாளை பிற்பகலுக்குள் வேட்பாளர்களின் முன்னணி நிலவரம் தெரியவரும், அதே நேரம் அதிகாரப்பூர்வ முடிவுகள் மாலை முதல் நள்ளிரவைத் தாண்டியும் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஒவ்வொரு தொகுதிக்கும் குறைந்தபட்சம் 14, அதிகபட்சம் 28 மேஜைகள் என மொத்தம் 3,372 மேஜைகள், தபால் வாக்குகளை எண்ண 739 மேஜைகள், சேவை வாக்காளர்களுக்கு 309 மேஜைகள் என 4,420 மேஜைகளில் வாக்கு கள் எண்ணப்படுகின்றன.
வாக்கு எண்ணிக்கையில் 16 ஆயிரத் துக்கும் அதிகமான பணியாளர்கlள் பயன் படுத்தப் படுகின்றனர்.
வாக்கு எண்ணும் மையங்களில் கொரோனா தடுப்பு வழிமுறைகள் கடுமையாக பின்பற்றப் படும். வாக்கு எண்ணும் மையத்தில் பணியில் ஈடுபடும் தேர்தல் அலுவலர், வேட்பாளர்களின் முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணும் மையத்தை விட்டு வெளியே செல்லும் முகவர்களுக்கு மீண்டும் உள்ளே வர அனுமதி கிடையாது. அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ள வாகனங்கள் மட்டும் வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்படும்
தமிழகம் முழுவதும் வாக்கு எண்ணும் மையங்களில் இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
வேட்பாளர்கள், முகவர்கள் மற்றும் அதிகாரிகள் தங்கள் வாகனங்களை நிறுத்த தனித்தனியாக இடவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையம் முழுவதும் சிசிடிவி கண்காணிப்பில் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளின் வாக்கு எந்திரங்கள் இராணி மேரிக் கல்லூரி, லயோலா கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய மூன்று வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளன.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை தாம்பரம் கிறிஸ்தவ கல்லூரியில் நடக்கிறது.வாக்கு எண்ணிக்கையையொட்டி சென்னையில் அமைக்கப்பட்டுள்ள இந்த 4 மையங்களிலும் 4 அடுக்குப் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.