படப்பிடிப்பில் விஷால் காயம்! துடித்துப்போன சீனுராமசாமி!!

நடிகர் விஷால் அறிமுக இயக்குநர் து.பா.சரவணன் இயக்கத்தில் உருவாகி வரும் இன்னும் பெயரிடப்படாத தனது ’31’ வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி தற்போது ஐதராபாத்தில் படமாக்கப்பட்டு வருகிறது.

இதில் விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாதி நடித்து வருகிறார்.இவர்களுடன் யோகி பாபு, அகிலன், ரவீனா உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

சண்டைக்காட்சியில் வில்லன் நடிகர் பாபுராஜுடன் விஷால் மோதும் காட்சியில் திடீரென எதிர்பாராத விதமாக விஷாலுக்கு முதுகில் பலத்த அடி பட, உடனடியாக பிசியோதெரபி மருத்துவர் ஒருவர் மூலம் படப்பிடிப்பு தளத்திலேயே விஷாலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

விஷாலும் சிறிது நேர ஓய்வுக்கு பின், மருத்துவர் கட்டாயமாக ஓய்வெடுக்க வற்புறுத்தியும் மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொண்டு சம்பந்த பட்ட காட்சியை முடித்து கொடுத்துள்ளார்.

இந்நிலையில் இது குறித்து தகவலறிந்த இயக்குனர் சீனு ராமசாமி தனது டுவிட்டர் பக்கத்தில்,” அன்பு சகோதரர் நடிகர் விஷால் படப்பிடிப்பில் காயமடைந்த தகவல் அறிந்து வருந்தினேன்.அவர் விரைந்து நலம்பெற்று தன் பணிகளை தொடர்ந்திட அன்பு கலந்த வாழ்த்துகளோடு பிரார்த்திக்கிறேன்”.. என பதிவிட்டுள்ளார்.