சசிகுமார், நிக்கி கல்ராணி இனைந்து நடித்திருக்க, தம்பி ராமையா, விஜய குமார், சுமித்ரா, ராதாரவி, யோகி பாபு, சிங்கம் புலி, மனோபாலா, சாம்ஸ், சதீஷ், ரேகா, நிரோஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம், ராஜவம்சம்.
இப்படத்தினை ‘செந்தூர் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷ்னல்’ சார்பில் டி. ராஜா தயாரித்துள்ளார். சுந்தர் சியின் உதவியாளர் கேவி.கதிர்வேலு இயக்கியிருக்கிறார்.
ஐடி துறையில் வேலை செய்யும் அசாத்திய திறன்மிகு, மென்பொறியாளர் சசிகுமார். அவருடைய கம்பெனிக்கு மிகப்பெரிய ஒரு ப்ராஜக்ட் கொடுக்கப்படுகிறது. 3 மாதத்தில் முடிக்க வேண்டிய அந்த ப்ராஜக்ட்டை 1 மாதத்தில் முடிக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலை.
சசிகுமாரின் குடும்பம் மிகப்பெரிய கூட்டுக்குடும்பம். அவருடைய கல்யாணத்தை எதிர் நோக்கி, அவரது அம்மா சுமித்ராவும் மொத்த குடும்பமும் இருக்கிறது. இந்நிலையில் தன்னுடன் வேலை செய்யும் நிக்கிகல்ராணியை தனது காதலியாக நடிக்குமாறு கூற, அவரும் நடித்து வருகிறார். சசிகுமாரின் அம்மா சுமித்ரா அதை நம்பி அவர்களுக்கு கல்யாணம் செய்து வைத்து விடுகிறார். இதன் பிறகு என்ன நடக்கிறதோ…!! அதுதான், ‘ராஜவம்சம்’ படத்தின் கதை, திரைக்கதை.. இத்யாதி…
‘ராஜவம்சம்’ ன்னு பெயரை வைத்துவிட்டு இவர்கள் அடிப்பதெல்லாம், கூத்துன்னா.. கூத்து ‘கோமாளி கூத்து’. அழவும் முடியல. சிரிக்கவும் முடியல.
கூட்டுக் குடும்பத்தின் நன்மையை சொல்றேன் பேர்வழின்னு.. பாடா படுத்தியிருக்காரு, இயக்குனர் கதிர்வேலு. 3 மாதம் முடிக்க வேண்டிய முக்கியமான வேலையை விட்டுவிட்டு, சொந்த ஊரில் சும்மா இருக்கும் சசிகுமாரின் கதாபாத்திர வடிவமைப்பு பரிதாபமாக இருக்கிறது. இதனால் மொத்த படத்தின் சாராம்சம் சிதைகிறது. இயக்குனர் திரைக்கதையை வடிவமைப்பதில் திணறி போயிருக்கிறார்.
சசிகுமார், நிக்கி கல்ராணி, தம்பி ராமையா, விஜய குமார், சுமித்ரா, ராதாரவி, யோகி பாபு, சிங்கம் புலி, மனோபாலா, சாம்ஸ், சதீஷ், ரேகா, நிரோஷா உள்ளிட்ட பலர் இயக்குனர் சொன்னபடி நடித்திருக்கிறார்கள். இதில் பலருக்கு வசனமே இல்லை. எதற்கு இவ்வளவு பெரிய கூட்டம்? இவர்களால் படத்துக்கோ, திரைக்கதைக்கோ எந்தவிதமான பிரயோசனமுமில்லை! என்பது தான் கூடுதல் சோகம்!
இதற்கு மேல் சொல்ல ஒன்றுமில்லை!