கர்நாடக இசையை ஆன்மாவோடு கலந்து கொடுத்த மாபெரும் இசைக் கலைஞர், மறைந்த எம்.எஸ். சுப்புலட்சுமியின் கொள்ளு பேத்திகள் எஸ்.ஐஸ்வர்யா மற்றும் எஸ். சௌந்தர்யா ஆகியோர் .ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதத்தை நவீன தொழில்நுட்பத்தில் பாட, மாண்டலின் கலைஞர் ராஜேஷ் இசையில் வெளியாகியுள்ளது.
இசைஞானி இளையராஜா, ‘ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம்’ ஆல்பத்தை வெளியிட்டுள்ளார்.
இந்நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், மாண்டலின் ராஜேஷ், பாடகிகள் ஐஸ்வர்யா, சௌந்தர்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இந்நிகழ்ச்சியில் இளையராஜா பேசியதாவது:-“சங்கீத உலகத்திலேயே மிகவும் உயர்ந்த பேரும் புகழும் பெற்ற எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடிய வெங்கடேச சுப்ரபாதத்தை அவரது தலைமுறையாக அவரது பேத்திகள் பாடியிருக்கிறார்கள்.மாண்டலின் ராஜேஷ் அதற்கு இசைக்கருவிகளை இசைத்து அதை மென்மேலும் அழகுப்படுத்தி இருக்கிறார்.
இதை நான் எப்படி பார்க்கிறேன் என்றால்… எம்.எஸ். அம்மா பாடிய காலத்திலே அவர்களின் குரலை கேட்பதற்காகவே , உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் அவரை ஒரு உயர்ந்த ஸ்தானத்தில் வைத்து அவரைப் போற்றிப் புகழ்ந்தார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
வருங்கால சந்ததியினருக்கு நாம் கொடுக்காமல் சங்கீதத்தை கையிலேயே எடுத்துக்கொண்டு போனால், இதில் என்ன பிரயோஜனம் இருக்கிறது ஆனால் இந்த தலைமுறைக்கு, அவர்களின் சந்ததியிலேயே எம்.எஸ்.அம்மாவின் பேத்திமார்கள் பாடியிருப்பதும், ராஜேஷ் அதற்கு உதவி செய்ததும், இந்தத் தலைமுறையினருக்கும், தலைமுறை தலைமுறையாக சங்கீதம் செல்ல வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் இருப்பதாகதான், நான் பார்க்கிறேன்.என்கிறார்