ஜெய்சங்கரின் ஆசையை நிறைவேற்றிய மகன் டாக்டர் விஜய்சங்கர்.!

ஜெய்சங்கர் மகனும் பிரபல கண் மருத்துவருமான விஜய்சங்கர்..அரசியல் தலைவர்கள், மற்றும் திரை உலக பிரபலங்கள் ,வி.ஐ.பி.க்கள் என்று மட்டுமல்ல ,சாதாரண மக்களும் கண் சிகிச்சைக்காக நம்பி வரக்கூடிய டாக்டர் விஜய் சங்கர்.
எப்படி நடந்தது என்பது தெரியாமலேயே ,படுத்த அடுத்த பத்தாவது நிமிடத்தில் கண் புரை அறுவை சிகிச்சை முடிகிறது. மறைந்த சோ ஆச்சரிப்படுகிறார்.
“என்னப்பா முடிஞ்சிருச்சா ?கருப்பு கண்ணாடி கூட கொடுக்காம அனுப்புறியே ?” என்று வியக்கிறார் அந்த அரசியல் விமர்சகர் ,நடிகர் , இப்படி எத்தனையோ அனுபவங்கள் .அண்மையில் அவரது ராஜா அண்ணாமலைபுரத்துக் கிளினிக்கில் இளைய திலகம் பிரபுவை காண முடிந்தது. டாக்டரின் நெருங்கிய நண்பர்களில் முக்கியமானவர் அஜித் குமார்.
டாக்டர் விஜய் சங்கர் கூறுவதை சற்று கேளுங்கள்.!
“காலேஜில் படிச்சு வந்த என் அப்பா சினிமா மீது கொண்ட மோகத்தால் சினிமாவில் திடீரென நடிக்கத் தொடங்கிவிட்டார். திரை உலகில் பெரிய ‘ஹீரோ’வாக வலம் வந்தாலும் படிப்பை முடிக்கவில்லையே என்ற வருத்தம் அவருக்கு இருந்தது. இதற்காக தனது குழந்தைகள் நன்கு படித்து பெரிய ஆளாக வர வேண்டும் என்று ஆசைப்பட்டார்.
அப்பாவோட 100-வது படமான இதயம் பார்க்கிறது என்ற படத்தில் கண் பார்வை இழந்தவர் கேரக்டரில் நடிச்சு இருப்பார். அப்போவே தனது குழந்தைகளில் ஒருவரை கண் டாக்டராக படிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். நான் கண் டாக்டருக்கு படித்து கண் டாக்டர் ஆனதும் அப்பா என்னை கட்டியணைத்து நான் சினி ஃபீல்டுலே பண்றது ஒன்னுமே இல்லை. நீ என்னை விட பெரிதாக சாதிச்சுட்டே என்று கூறி சந்தோஷப்பட்டார். அதைப் போல என் தம்பியை என்ஜினீயருக்கும், தங்கையை டாக்டருக்கும் படிக்க வைச்சார்.
ஒரு நாளைக்கு ‘3 ஷிப்ட்’ முறையில் அவர் சினிமாவில் நடித்துக்கொண்டு இருந்தபோது நான் மணிப்பாலில் டாக்டருக்கு படித்துக்கொண்டு இருந்தேன். அவருடன் நான் அதிக நேரம் செலவழிக்க முடியவில்லை என்பதுதான் என் வாழ்க்கையில் உள்ள ஒரே குறையாகும்.
மற்றவர்களுக்காக அவர் வாழ்ந்தார். அவருக்காக அவர் வாழவில்லை. இது ஒன்றுதான் குறை.
நான் கண் டாக்டராகி ஆயிரம் பேருக்கு ‘ஆபரேஷன்’ செய்ய வேண்டும் என்பதுதான் அவரது ஒரே ஆசை. அவரது விருப்பப்படியே கண் டாக்டராகி பல்லாயிரம் பேருக்கு அறுவை சிகிச்சை செய்து அவருடைய ஆசையை நிறைவேற்றி விட்டேன். அவரது ஆன்மா எங்களை என்றென்றும் ஆசீர்வதித்து கொண்டு இருக்கும்.”என்கிறார்.
தந்தையின் ஆசையை கட்டளையாக ஏற்றுக்கொண்டு சிறப்புடன் வாழ்ந்து வருகிறார் டாக்டர் விஜய சங்கர்.