கதாநாயகனாக நடித்திருக்கும் பிரவீன் கதை, திரைக்கதை, எழுதி இயக்கியிருக்கும் படம், போத்தனூர் தபால் நிலையம். அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார், அஞ்சலி ராவ். 1990 களில் ஒரு தபால் நிலையத்தில் நடக்கும் கொள்ளை சம்பவம் தான் படத்தின் கதை.
கதாநாயகன் பிரவீனின் அப்பா, போத்தனூர் தபால் நிலையத்தின் ‘போஸ்ட் மாஸ்டர்’ ஜெகன் கிரீஷ். நேர்மையானவர். பிரவீன் சொந்தமாக தொழில் செய்வதற்காக பணம் தேடி வருகிறார்.
வழக்கம்போல் ஒரு நாள் போஸ்ட் ஆஃபிஸில் அனைவரும் பரபரப்பாக இயங்கி வரும் நிலையில் ஒருவர் பல லட்சம் ரூபாய்களை டெபாசிட் செய்கிறார். போஸ்ட் ஆஃபிஸில் போதிய பாதுகாப்பு இல்லாத்தால் ‘போஸ்ட் மாஸ்டர்’ ஜெகன் கிரீஷ் தன்னுடைய வீட்டிற்கு அந்தப் பணத்தினை எடுத்து செல்கிறார். வீட்டிற்கு செல்லும் வழியில் போஸ்ட் ஆஃபிஸில் வேலை செய்பவருக்கு ஆக்ஸிடென்ட் ஆகிறது. அவரை காப்பாற்ற இவர் முயற்சி செய்கிறார். அப்போது அவர் எடுத்து வந்த பல லட்சம் காணாமல் போகிறது. இதனால் அவரது வாழ்க்கையில் மிகப்பெரிய இக்கட்டான சூழ்நிலை உருவாகிறது.
சொந்த தொழில் செய்ய முயற்சி செய்துகொண்டிருக்கும் அவரது மகன் பிரவீன் காணாமல் போன பல லட்சங்களை கண்டுபிடிக்க தன்னுடைய நண்பன் வெங்கட் சுந்தர் மற்றும் காதலி அஞ்சலி ராவ் ஆகியோரின் துணையோடு களம் இறங்குகிறார். அவர் கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பது தான் படத்தின் மீதிக்கதை.
எழுதி, இயக்கி, கதாநாயகனாக நடித்து இருக்கும் பிரவீன் படமாக்கிய விதத்தில் 1990 கால கட்டத்தினை அப்படியே கண்முன் கொண்டுவந்து இருக்கிறார். கதாபாத்திரங்களுக்கான நடிகர், நடிகைகளையும் சரியாக தேர்ந்தெடுத்துள்ளார். குறிப்பாக ‘போஸ்ட் மாஸ்டர்’ ஆக நடித்திருக்கும் ஜெகன் கிரீஷ், கதாநாயகியாக நடித்திருக்கும் அஞ்சலி ராவ், பிரவீனின் நண்பராக நடித்திருக்கும் வெங்கட் சுந்தர் உள்ளிட்ட படத்தில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்து உள்ளனர்.
முதல் பாதி சோர்வை தருகிறது. ஆனால் அடுத்தடுத்த காட்சிகள் சற்று சுவாரஸ்யத்தை தருகிறது. இரண்டாம் பாதியில் அந்த குறைகள் இல்லை. விறுவிறுப்பாக செல்லும் திரைக்கதை க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் கைதட்டச்செய்கிறது.
ஒளிப்பதிவாளர் சுகுமாரன் சுந்தர், இசையமைத்திருக்கும் தென்மா, பின்னணி இசை அமைத்திருக்கும் எலன் செபாஸ்டியன் என தொழில்நுட்பத்திலும் குறைவில்லை.
கதையினை யூகிக்க முடிந்தாலும், க்ளைமாக்ஸ் டிவிஸ்ட் சூப்பர். சற்று கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் எல்லோரும் கொண்டாடடும் விறுவிறுப்பான சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லர் படமாக அமைந்திருக்கும்.