ஊட்டியை நடுங்க வைக்கும் சைக்கோ கொலைகாரன் தொடர்கொலைகளை செய்து வருகிறான். அஷோக் செல்வனும் அவரது காதலி ஐஸ்வர்யா மேனனும் வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பும் வழியில் அந்த சைக்கோ கொலைகாரன் அவர்களை தாக்குகிறான். இதில் ஐஸ்வர்யாமேனன் பலியாகிறார். கொலைகாரன் தப்பிச்செல்கிறான்.. போலீஸாரால் துப்பு துலங்கமுடியாமல் போகிறது. ஆனால் அஷோக்செல்வன் கொலையாளியை தேடிச்செல்கிறான். கொலையாளி யார்? கொலைசெய்வதற்கான காரணம் என்ன? அஷோக் செல்வன் கண்டுபிடித்தரா.. இல்லையா? என்பது தான் ‘வேழம்’ படத்தின் திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!
அஷோக் செல்வன் முதன்முறையாக ஒரு ஆக்ஷன் த்ரில்லர் படத்தில் நடித்திருக்கிறார். ஏற்றுக்கொண்ட கதாபத்திரத்திற்கு சிறப்பு சேர்க்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் அதிரடி காட்டுகிறார். அவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா மேனன், ஜனனி என இருவருமே அவருக்கு இணையாக நடித்துள்ளனர். அவர்களது நடிப்பினில் குறையில்லை.
போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் அறிமுக நடிகர் ஷ்யாம் சுந்தர், கவனம் பெறுகிறார். ஆனால் அவருடைய காஸ்ட்யூம் ஏனோ தானோவென்று இருக்கிறது. அபிஷேக், கிட்டி, பி.எல்.தேனப்பன் உள்ளிட்டோரும் அவர்களது கதாபாத்திரங்களுக்கு ஏற்ப நடித்து இருக்கிறார்கள்.
ஜானு சந்தரின் இசையமைப்பில் பாடல்கள் பரவாயில்லை. பின்னணி இசையிலும் குறையில்லை.
அதேபோல் சக்தி அரவிந்தின் ஒளிப்பதிவும் படத்திற்கு பெரும் பலமாக அமைந்திருக்கிறது.
அறிமுக இயக்குநர் சந்தீப் ஷ்யாம் க்ரைம் சஸ்பென்ஸ் த்ரில்லர் கதையினை நேர்த்தியாக வடிவமைத்திருக்கிறார். முதல் படத்திலேயே குறிப்பிட்ட அளவு கவனமும் பெறுகிறார். க்ளைமாக்ஸ் வரை டிவிஸ்டுகள் கொடுத்து ரசிகர்களை ஈர்க்கிறார்.
‘வேழம்’, பாராட்டும்படியான ஒரு சஸ்பென்ஸ், க்ரைம், த்ரில்லர்!