வாரிசு படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் ‘கேங்ஸ்டராக’ நடிக்கும் ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரத்தில் காஷ்மீரின் ஸ்ரீநகரில் தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. இப்படத்தில் விஜயுடன் இயக்குனர் மிஷ்கின், கௌதம் மேனன், த்ரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இப் படப்பிடிப்புக்காக தனி விமானத்தில் படக்குழு புறப்பட்டு சென்றது. அடுத்த இரண்டு நாட்களில் படக்குழுவினருடன் ஏற்பட்ட மோதலால் நடிகை திரிஷா சென்னை திரும்பியதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், திரிஷாவின் அம்மா,அதெல்லாம் சும்மாங்க,.அந்த 2 நாட்களில் திரிஷா சம்பந்தப்பட்ட காட்சிகள் இல்லாததால் கிடைத்த கேப்பில் சென்னை வந்து விட்டு சென்றுள்ளார். தற்போது காஷ்மீரில் பெகல்ஹாம் பகுதியில் நடக்கும் ‘லியோ’ படப்பிடிப்பில் தான் இருக்கிறார்.என கூறியுள்ளார்.
இந்நிலையில்,காஷ்மீர் மற்றும் ஸ்ரீநகர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் முதல் கட்ட படப்பிடிப்பை மொத்தம் 60 நாட்கள் நடத்தப்பட உள்ளதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு நடந்து வரும் படப்பிடிப்பு வேலைகளில் தினமும் 500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
காஷ்மீரில் முதல்கட்ட படப்பிடிப்பை முழுவீச்சில் நடத்திவிட்டு சென்னை திரும்பும் படக்குழு சில தினங்கள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அடுத்த கட்ட படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப் படப்பிடிப்பின் நடுவே லோகேஷ் கனகராஜ் எடுத்துக் கொண்ட BTs புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது