டைலர் டர்டன் மற்றும் கினோ ஃபிஸ்ட் பட தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ‘மாடர்ன் லவ் சென்னை’ எனும் ஆந்தாலாஜி திரைப்படம் 6 அத்தியாங்களாக உருவாகியுள்ளது. இப்படம் வரும் மே 18 ஆம் தேதியன்று அமேசான் ப்ரைம் வீடியோவில் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
இப்படத்தை இயக்குனர்கள் பாரதிராஜா, பாலாஜி சக்திவேல், ராஜுமுருகன், கிருஷ்ணகுமார் ராம்குமார், அக்ஷய் சுந்தர் மற்றும் தியாகராஜன் குமாரராஜா ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர் இதில் ‘பறவை கூட்டில் வாழும் மான்கள்’ என்ற கதையை பாரதிராஜா இயக்கியுள்ளார் இப்படத்தில் சஞ்சுலா சாரதி, அசோக் செல்வன், டி ஜே பானு, வசுந்தரா, ரிது வர்மா, சம்யுக்தா விஸ்வநாதன், கிஷோர், ரம்யா நம்பீசன், விஜயலட்சுமி, வாமிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இதன் முனனோட்ட வெளியீட்டு விழா நிகழ்வு சென்னையில் நடந்தது இந்நிகழ்வில் கலந்து கொண்ட இயக்குனர் பாரதிராஜா பேசுகையில்,”நான் பாரம்பரிய பிடிப்புள்ள மனிதன். திரைத்துறையில் ஐம்பது ஆண்டுகள் பயணித்திருக்கிறேன். வழக்கமான படைப்புகளில் இருந்து திசை மாறி புதுமையாக சொல்ல வேண்டும் என விரும்புவதுண்டு. என்னை காதல் கதைகளை.. காதல் உணர்வுகளை.. காட்சிப்படுத்துவதில் மன்னன் என்று சொல்வதுண்டு.
காதல் இல்லையேல் வாழ்க்கை இல்லை. காதலிக்கவில்லை என்றால் கலைஞனாக முடியாது. காதல் என்பது இதுதான் என எந்த வரையறையும் இல்லை. காதல் என்பது மென்மையானதுஎனக்கு வயதாவதில்லை. வயதைக் குறித்து நான் எப்போதும் கவலைபட்டதில்லை.
இன்றும் நான் இளைஞனாகவும், இளமையாகவும் உணர்கிறேன். இந்த 84 வயதிலும் காதலிக்கிறேன் என்பதனை தைரியமாக சொல்கிறேன்.எனக்கு ஒன்பதாவது படிக்கும்போது ஒரு காதல் ஏற்பட்டது. அதன் பிறகு சென்னைக்கு வந்தவுடன் இங்கும் மற்றொரு காதல் உண்டானது. அதன் பிறகு காலங்கள் மாற மாற நான்கு காதல்கள் ஏற்பட்டது.நான்கு காதல்கள் இருக்கிறது என்கிறீர்களே..! இதில் எங்கே காதல்? என்று கேட்டால், இந்த குடை தான் நிழல் தரும் என கருதக்கூடாது. நமக்கு எந்தக் குடையும் நிழல் தரும் என நினைக்க வேண்டும்.
நிழல் தரும் அந்த நான்கு குடைகளையும் என்னால் மறக்க இயலாது. ஏனெனில் காதல் இல்லாமல் இருக்க இயலாது. காதல் தவிர்க்க முடியாதது. அவசியமானது.‘பறவை கூட்டில் வாழும் மான்’ எனும் அத்தியாயத்தை இயக்க வாய்ப்பளித்ததற்காக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.இளையராஜா இந்த படைப்புக்கு மாயாஜால வித்தை காட்டி என்னை அசத்தி விட்டார்.” என்றார்.
மே 18 ஆம் தேதியன்று அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகும் மாடர்ன் லவ் சென்னை எனும் ஆந்தாலாஜி பாணியிலான திரைப்படத்தில் ஆறு அத்தியாங்கள் இடம்பெற்றுள்ளன.
1.”லாலாகுண்டா பொம்மைகள்” – ராஜுமுருகன் எழுதி, இயக்கியுள்ள இந்த அத்தியாயத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். இதில் ஸ்ரீ கௌரி பிரியா, வாசுதேவன் முரளி மற்றும் வசுந்தரா ஆகியோர் நடித்துள்ளனர்.
2.“இமைகள்” – பாலாஜி தரணீதரன் கதை எழுத, பாலாஜி சக்திவேல் இயக்கியிருக்கிறார். ஜீவா சங்கர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த அத்தியாயத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இதில் அசோக் செல்வன் மற்றும் டி.ஜே. பானு நடித்துள்ளனர்.
3.“காதல் என்பது கண்ணுல ஹார்ட் இருக்குற எமோஜி” – ரேஷ்மா கட்டலா கதை எழுத, கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கியிருக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த அத்தியாயத்திற்கு ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். இதில் ரிது வர்மா, சம்யுக்தா விஸ்வநாதன், பவன் அலெக்ஸ் மற்றும் அனிருத் கனகராஜன் ஆகியோர் நடித்துள்ளனர்.
4.“மார்கழி” – பாலாஜி தரணீதரன் கதை எழுத, அக்ஷய் சுந்தர் இயக்கியிருக்கிறார். விகாஸ் வாசுதேவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த அத்தியாயத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். இதில் சஞ்சுலா சாரதி, சூ கோய் ஷெங் மற்றும் ஸ்ரீகிருஷ்ண தயாள் ஆகியோர் நடித்துள்ளனர்.
5.“பறவை கூட்டில் வாழும் மான்கள்” – பிரதீப் குமார் .எஸ் கதை எழுத, பாரதிராஜா இயக்கியிருக்கிறார். ஜீவா சங்கர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த அத்தியாயத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். இதில் கிஷோர், ரம்யா நம்பீசன் மற்றும் விஜயலட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர்.
6.“நினைவோ ஒரு பறவை” – இந்த அத்தியாயத்தை எழுதி இயக்கியிருக்கிறார் தியாகராஜன் குமாரராஜா. நிரவ் ஷா மற்றும் ஜீவா சங்கர் ஒளிப்பதிவு செய்யி, இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். இதில் வாமிகா மற்றும் பிபி நடித்துள்ளனர்.