இராவண கோட்டம்.திரைவிமர்சனம்
ராமநாதபுர மாவட்டம் ஏனாதி கிராமத்தில் நடக்கும் கதை. அங்கு மேலத்தெரு, கீழத்தெரு என இரு பகுதிகள். மேலத்தெரு தலைக்கட்டு பிரபு, கீழத்தெரு தலைக்கட்டு இளவரசு இருவரும் பல ஆண்டுகால நெருங்கிய நண்பர்கள் ஊருக்குள் இருதரப்புக்கும் இடையே நடக்கும் அனைத்து பிரச்சினைகளும் இவர்களது பேச்சு வார்த்தையிலேயே தீர்க்கப்பட்டு விடுகிறது.அதே போல பிரபுவுக்கு வேண்டிய செங்குட்டுவனும் (சாந்தனு), இளவரசு மகன் மதிமாறனும் (சஞ்சய் சரவணன்) நெருங்கிய நண்பர்கள்.அந்த ஊருக்குள் எந்த அரசியல் வாதிக்கும் அரசியல் கட்சிக்கும் இடம் கிடையாது.அதாவது கரைவேட்டி கட்சி கோடிக்கு அங்கு இடம் இல்லை.
இந்நிலையில், காய்ந்து கிடக்கும் அந்த வறண்ட பூமியின் கனிம வளத்தைச் சுரண்டுவதற்கும், அதற்கு வசதியாக கார்பரேட் நிறுவனம் ஒன்றுக்கு கோடிகளில் லஞ்சம் வாங்கிக்கொண்டு அனுமதி வழங்கவும் தங்கள் அரசியல் ஆதாயங்களுக்காகவும்,உள்ளூர் எம்.எல்.ஏ தாஸும் (அருள்தாஸ்), அமைச்சர் ராசாகண்ணுவும் (பி.எல்.தேனப்பன்). அந்த ஊரைப் பிரிக்க நினைக்கிறார்கள் இதற்கு பெரும் தடையாக இருக்கும் பிரபுவும், இளவரசும் கொல்லப்படுகிறார்கள். செங்குட்டுவன்- இந்திரா (ஆனந்தி) காதலை பயன்படுத்தி,செங்குட்டுவன் மதிமாறன் நட்பையும் பிரித்து, அவர்களுக்குள் மோதலை ஏற்படுத்துகிறார்கள்.தலைவர்கள் இருவரும் இல்லாத நிலையில், அமைதியாக இருந்த ஊர், அரிவாள் தூக்குகிறது. இதையடுத்து அங்கு என்ன நடக்கிறது என்பது கதை.
1957 ஆம் ஆண்டு நடந்த முதுகுளத்தூர் கலவர சம்பவங்களை இன்ஸ்பிரேஷனாக எடுத்து கதையை சொல்லி இருக்கிறார் விக்ரம் சுகுமாறன். சாதி கலவரங்களின் பின்னணியில் இருக்கும் அரசியலையும், அதில் விட்டில் பூச்சிகளாய் விழும் அப்பாவி மனிதர்களின் அறியாமையையும் இயல்பாக சொல்ல முயற்சித்திருக்கிறார், இயக்குநர் விக்ரம் சுகுமாரன். கருவேல மர ஒழிப்பின் பின்னணியில் இருக்கும் அபாயத்தையும்,,அரசியல் சிக்கல்களையும் பேசியிருக்கும் அவர், அம்மாவட்ட எதிர்காலம் குறித்தும் இப்படத்தின் மூலமாக எச்சரிக்கை மணியையும் அடித்திருக்கிறார்.
சாந்தனு நடிப்பில் நல்ல மாற்றம் தெரிகிறது ஒரு கிராமத்தின் இயல்பான துறு துறு இளைஞனாக அனைவரையும் கவர்கிறார்.சஞ்சய் சரவணனிடம் பங்காளி என நட்புடன் நல்ல நண்பனாய், கயல் ஆனந்திக்கு பிடித்த காதலனாக பிரபுவிடம் சொல்லுங்கய்யா என்று பணிவதிலாகட்டும்,எதிரிகளிடம் சீறுவதிலாகட்டும், கபடிபோட்டியில் ஜல்லிக்கட்டு காளை யாக துள்ளி குதிப்பதிலாகட்டும் முடிந்தவரை நன்றாக நடித்து இருக்கிறார்.எமோஷனலான இடங்களில் சற்று கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம் . கயல் ஆனந்தி தனக்கு கொடுத்த வேலையை செய்திருக்கிறார்.ஊர் தலைக்கட்டு பிரபு, அவரது நண்பர் இளவரசு, சுஜாதா, தீபா சங்கர், சுயநல அரசியல்வாதிகள் அருள்தாஸ், அமைச்சர் பி.எல்.தேனப்பன் ஆகியோர் தங்களின் கதாபாத்திரங்களுக்கு தகுந்த கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.வெற்றிவேல் மகேந்திரனின் ஒளிப்பதிவு வறண்ட மாவட்டத்தின் கருவேல காடுகலின் அழகிய ஆபத்தை அப்படியே கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது ஜஸ்டின் பிரபாகரின்பின்னணி இசை காட்சிகளுக்கு வலு சேர்த்து இருக்கிறது.சில காட்சிகள் தொலைக்காட்சி தொட்டே பார்ப்பது போல் உள்ளத்தையும் மறுக்க முடியாது.இயக்குனர் பிற்பாதி திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் இராவண கோட்டம் சிறப்பாக அமைந்திருக்கும்.