‘குட் நைட்’ திரைவிமர்சனம்
நடிகர்கள் ‘ஜெய் பீம்’ மணிகண்டன், மீதா ரகுநாத் ரமேஷ் திலக்
இயக்குனர் விநாயக் சந்திரசேகரன்
ரேட்டிங் 3/5
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் வெளிவந்துள்ள படம், குட் நைட். அறிமுக இயக்குநர் விநாயக் சந்திரசேகரன், இயக்கியிருக்கிறார். இதில் மணிகண்டன்,மீத்தா ரகுநாத், ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், உமா ராமச்சந்திரன் ,பக்ஸ் உள்பட பலர் நடித்துள்ளனர்.
நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இளைஞனான மோகன் (மணிகண்டன் )அவர் தூங்கும் நேரத்தில் விடும் குறட்டை சத்தம் அவரை சுற்றி இருக்கும் அனைவரையும் பாதிக்கிறது. இதனால் நண்பர்கள், அலுவலகம், என அனைவராலும் கிண்டலுக்கு ஆளாகிறார். காதலியையும் பிரித்து விடும் குறட்டைஅவரை படாத பாடு படுத்துகிறது.. இதனால், வாழ்க்கையில் விரக்த்தியில் இருக்கிறார்
இந்நிலையில் வாழ்க்கையில் பல இன்னல்களை அனுபவித்து வரும் நாயகி மீத்தா ரகுநாத்தை , மணிகண்டன் சந்திக்கிறார். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர். வழக்கம்போல் மணிகண்டனின் திருமண வாழ்க்கையில் குறட்டைச்சத்தம் ‘குண்டு’ வைக்கிறது.
மணிகண்டன், மீத்தா ரகுநாத் இருவரும் பிரிவை நோக்கி செல்கின்றனர். இறுதியில் என்ன நடக்கிறது என்பதை, சின்ன சின்ன எமோஷன் கலந்த அதிரடி சரவெடி நகைச்சுவை திரைக்கதையாக்கியுள்ளார் இயக்குநர் விநாயக் சந்திரசேகரன்.
நாயகனாக நடித்திருக்கும் ‘ஜெய்பீம்’ மணிகண்டனுக்கு ஏற்ற கதாபாத்திரம்.அம்மா,அக்கா, மாமா தங்கை என்று நடுத்தர குடும்பத்தில் வாழும் ஒரு இளைஞனாக இயல்பாக நடித்து ரசிகர்களின் மனதில் பச்சக் என எளிதில் ஒட்டிக்கொள்கிறார்.
. குறட்டையால் படும் அவஸ்தையை மிக அழகாக பிரதிபலிக்கிறார். அதிலும் டீம் லீடர் பக்ஸுடன் (பகவதி பெருமாள்) ஏற்படும் மோதலில் வாங்கிக் கட்டிக்கொள்ளும் போதும், க்ளைமாக்ஸில் அதை திருப்பி கொடுக்கும் போதும் மிகச் சிறப்பான நடிப்பினை கொடுத்துள்ளார்.
மணிகண்டனுக்கும், ரமேஷ் திலக்கிற்கும் இடையே நடக்கும் சம்பவங்கள் அனைத்துமே கலக்கல் காமெடி கலாட்டா! அதிலும் வாட்டர் ஃபில்ட்டர் மாட்டுறேன்னு வந்து எங்க அக்காவையே கரெக்ட் பண்ணுன ஆள் தானே நீ என்ற காமெடி செம…
மணிகண்டன் – மீத்தா ரகுநாத் இருவருக்கிடையேயான எமோஷனல் காட்சிகளும் சிறப்பு.மீத்தா ரகுநாத்த்தின் தாத்தா பாட்டியாக இயக்குனர் பாலாஜி சக்திவேலும், கெளசல்யா நடராஜனும் நடித்து இருக்கின்றனர்.
இதில், குறட்டை பிரச்சனையுடன் சமூகத்தில் இன்றளவும் நிலவும் மூட நம்பிக்கைகள், கல்யாணம் ஆகிட்டாலே அடுத்து, எதுவும் விசேஷம் இல்லையா என கேட்கும் உறவுகள் அதனால சம்பந்தப்பட்ட தம்பதியினருக்கு ஏற்படும் வலி உள்ளிட்ட பல விஷயங்களை படத்தில் மிக அழகாக சொல்லியுள்ளார் இயக்குனர்
அதிர்ஷ்டம் கெட்ட பெண் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நாயகி மீத்தா ரகுநாத், அந்த கதாபாத்திரத்திற்கு அப்படியே பொருந்தி போகிறார். சிறப்பாகவும் நடித்திருக்கிறார்.
ரமேஷ் திலக், ரைச்சேல் ரெபாகா இருவரும் ஜோடியாக நடித்திருக்கிறார்கள். இருவருமே சிறப்பு.
ஒளிப்பதிவாளர் ஜெயந்த் சேது மாதவனின் ஒளிப்பதிவும், இசையமைப்பாளர் ஷான் ரோல்டனின் பின்னணி இசையும் படத்தின் பலம்.
மொத்தத்தில், குட் நைட் திரைப்படத்தை அனைவரும் குடும்பத்துடன் பார்த்து மகிழலாம்.