அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம் ‘போர் தொழில்’. இதில் அசோக் செல்வன், ஆர். சரத்குமார், நிகிலா விமல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கலைச்செல்வம் சிவாஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையைமத்திருக்கிறார். புலனாய்வு திரில்லர் ஜானரிலான இந்த படத்தை அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட், ஈ 4 எக்ஸ்பிரிமென்ட்ஸ் மற்றும் எப்ரியாஸ் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. வரும் ஜுன் 9 ஆம் தேதியன்று வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது.இந்நிகழ்வில்இந்நிகழ்வில் அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட்டின் பிரமோத் செருவய்யா,, சுனில் சாய்னானி, E4 எக்ஸ்பிரிமென்ட்ஸின் முகேஷ் மேத்தா, எப்ரியாஸ் ஸ்டுடியோஸைச் சேர்ந்த சந்தீப் மெஹ்ரா, விநியோகஸ்தர் சக்திவேலன், இயக்குநர் விக்னேஷ் ராஜா, ஒளிப்பதிவாளர் கலைச்செல்வம் சிவாஜி, இணை கதாசிரியர் ஆல்பிரட் பிரகாஷ், நடிகர்கள் ஆர். சரத்குமார், அசோக் செல்வன், நடிகை நிகிலா விமல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விநியோகஸ்தர் சக்திவேலன் பேசுகையில், ” போர் தொழில் படத்தை பார்த்து விட்டேன். படம் சிறப்பாக வந்திருக்கிறது. தரமான படைப்பாக தயாராகி இருக்கிறது.‘ராட்சசன்’ திரைப்படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும்போது, எவ்வாறான உணர்வு ஏற்பட்டதோ.. அதைவிட ஒரு மடங்கு கூடுதலான உணர்வை இந்த திரைப்படம் அளிக்கும்.
சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா விமல் போன்றவர்கள் திறமையாக நடித்திருக்கிறார்கள்.. சரத்குமாரின் இடத்தை நிரப்புவதற்கு தென்னிந்தியாவில் எந்த நட்சத்திரங்களும் இல்லை என உறுதியாக கூறலாம்.
‘ஓ மை கடவுளே’ படத்திற்குப் பிறகு அசோக் செல்வன் நடித்திருக்கும் இந்த ‘போர் தொழில்’ படத்தை வெளியிடுகிறேன். இந்த படத்திலும் அசோக் செல்வன் சாக்லேட் பாயாக அறிமுகமாகி, உச்சகட்ட காட்சியில் நம் மனதில் பதிந்து விடுவார். ‘போர் தொழில்’ திரைப்படம் சுவாரசியமான திரில்லர் திரைப்படமாக உருவாகி இருக்கிறது.” என்றார்.
நடிகர் அசோக் செல்வன் பேசுகையில், ” எனக்கும் மிகவும் பிடித்த திரைக்கதை இது. இயக்குநருடன் கல்லூரி காலகட்டத்திலிருந்து ஏராளமான குறும் படங்களிலும்.. விளம்பர படங்களிலும்.. பணியாற்றிருக்கிறேன். மிகத் திறமையான படைப்பாளி. அவர் சொன்ன இந்த திரைக்கதை வித்தியாசமாக இருந்தது. இதுவரை ஏராளமான க்ரைம் திரில்லர் திரைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. மர்டர் மிஸ்டரி பாணியிலான திரைப்படங்களும் வெளியாகியிருக்கிறது. ஆனால் இந்த திரைப்படத்தில் இரண்டு கதாபாத்திரங்கள் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதில் , மீசை இல்லாத போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறேன்.
இதற்கு நேர் எதிராக கரடு முரடான தோற்றத்தில் மூத்த காவல் அதிகாரியாக சரத்குமார் நடித்திருக்கிறார். காவல்துறையில் பயிற்சிகளை முடித்துவிட்டு கள அனுபவம் இல்லாத ஒரு இளம் காவலரும், கள அனுபவம் அதிகம் உள்ள மூத்த காவல் அதிகாரியும் எப்படி ஒருங்கிணைந்து பணியாற்றுகிறார்கள்? இவர்கள் இருவரும் இணைந்து எப்படி ஒரு கொலை குற்றவாளியை கண்டுபிடிக்கிறார்கள்? என்பது தான் படத்தின் கதை.
அனுபவம் மிக்க சரத்குமாருடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. அவருடன் நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. குறிப்பாக ‘போர் தொழில் 2’ வில் நடிக்க விருப்பம். நடிகை நிகிலா விமலுடன் இணைந்து பணியாற்றியதும் மறக்க இயலாத அனுபவம். அவர் இந்த படத்தில் எனக்கு காதலியாக நடிக்கவில்லை. அதில் சின்ன வருத்தம் இருக்கிறது. திரில்லர் ஜானரிலான படத்தை பார்த்து ரசிப்பவர்களுக்கு இந்த ‘போர் தொழில்’ படம் நிச்சயம் பிடிக்கும்”இவ்வாறு அவர் பேசினார்.

