மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை ! அரசியலில் அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு தயாரான விஜய்!
கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், வாட்ஸ் அப் மூலம் அனைத்து மாவட்ட தலைவர்களுக்கும் அவசர தகவல் ஒன்றை அனுப்பிஇருந்தார் . அதில், மாவட்ட தலைவர்கள் தொகுதி வாரியாக, அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சிறப்பு பரிசு வழங்கப்பட உள்ளது. அவர்களின் பட்டியலை தயார் செய்ய வேண்டும் என்றும், மாணவர்களின் தேர்வு எண் , பிறந்த தேதி, மதிப்பெண் சான்றிதழ் நகல் அல்லது ஆன்லைனில் வெளியான தேர்வு முடிவுகள், ஆதார அட்டை நகல், 4 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், வங்கிக் கணக்கு அட்டை நகல் மற்றும் மொபைல் எண் ஆகியவற்றையும் சேகரித்து, வரும் 20ம் தேதிக்குள், சென்னை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்நிலையில்,விஜய் மக்கள் இயக்கம் சார்பாக அதன் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,”ஒரு பிறப்பில் தான் கற்றக் கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் அவனுக்கு ஏழுபிறப்பிறப்பிலும் உதவும் தன்மை உடையது. நடிகர் விஜய்யின் சொல்லுக்கு இணங்க வரும் 17 6 2023 சனிக்கிழமை அன்று அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர். கே. கன்வென்ஷன் சென்டரில், 2023 ஆம் ஆண்டு நடந்து முடிந்த பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவிகளுக்கு, நடிகர் விஜய், மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் முன்னிலையில், சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி கௌரவப்படுத்த உள்ளார். இவ்வாறு விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி என் ஆனந்த் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
இந்த சந்திப்பு நிகழ்ச்சியில், தொகுதிக்கு 6 மாணவர்கள், 2 பெற்றோர்கள் என 234 தொகுதிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் உட்பட சுமார் 6,000 பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மாணவர்களுக்கு உதவிகள் வழங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.மேலும் மாணவ மாணவிகளுக்கு சுடச்சுட பிரியாணி விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் நடிகர் விஜய் அவர்களுக்கு தானே பரிமாற்ற உள்ளதாவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அரசியல் கட்சிகளுக்கு இணையாக தமிழகம் முழுவதும் உள்ள விஜய் மக்கள் இயக்கத்துக்கு மருத்துவர் அணி,வழக்கறிஞர் அணி,பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து மகளீர் அணி,தொண்டர் அணி, பூத் கமிட்டி அமைப்பது என அடித்தள வலுவான கட்டமைப்பை உருவாகியுள்ளது.உள்ளாட்சி தேர்தலில் போட்டி, விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் உடனான சந்திப்பு, அம்பேத்கார் சிலைக்கு மாலை, உலக பட்டினி தினத்தில் தமிழகம் முழுவதும் உள்ள ஏழைகளுக்கு மதிய உணவு வழங்கியது பள்ளி மாணவர்களின் சத்துணவுக்கான பங்களிப்பு,தற்போது மாணவ,மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை போன்ற பல்வேறு நலத்திட்டங்களை விஜய் மக்கள் இயக்கம் கையில் எடுத்துள்ளது தமிழக அரசியலில் விஜயின் அடுத்த கட்ட பாய்ச்சலாகவே அரசியல் நோக்கர்களால் பார்க்கப்படுகிறது. தமிழக அரசியலில் வரும் 2026-ல் விஜயின் பங்களிப்பு கண்டிப்பாக இருக்கும் என்கிறது அவரது நெருங்கிய வட்டாரம்