சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு! பாதியில் நிறுத்தப்பட்ட இந்தியன்-2 படப்பிடிப்பு!
நடிகர் கமல்ஹாசன் தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது
இப் படத்தின் படப்பிடிப்பு இதுவரை 90 சதவீதம் முடிவடைந்துள்ள நிலையில், எஞ்சியுள்ள காட்சிகளின் படப்பிடிப்பு தற்போது சென்னை விமான நிலையத்தில் நடத்தப்பட்டு வருகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் ஷங்கர், நடிகர் கமல்ஹாசன், போலீஸ் வேடமணிந்த துணை நடிகர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர். இந்நிலையில், விமான நிலைய காவல் நிலையத்தில் இந்தியன் 2 படக்குழு முன் அனுமதி பெறவில்லை என தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இதனையடுத்து, விமான நிலைய நிர்வாகம் மூலம் காவல்துறையினரிடம் தெரிவிக்கப்பட்டு முறையான அனுமதியுடன் படப்பிடிப்பு நடந்து வருவதாகவும்,விமான நிலையத்தில் படப்பிடிப்பு நடத்துவதற்கு ஜிஎஸ்டி வரியுடன் ரூ.1.24 கோடி செலுத்தி அனுமதி பெற்றுள்ளதாகவும் லைகா நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,விமானம் புறப்படும் பகுதியில் மட்டுமே படமெடுக்க அனுமதி வழங்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால் படக்குழுவினர் விமான நிலையத்தின் கழிவறை பகுதியில் ஒரு காட்சியை படமாக்கியுள்ளனர்.
இதனால் விமான நிலைய அதிகாரிகள் முறையான அனுமதி இல்லை எனக் கூறி படப்பிடிப்பை நிறுத்தும்படி உத்தரவிட்டனர்.
இதனால் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக படம் வெளியாகும் தேதி தள்ளிபோகும் என கூறப்படுகிறது.