கமல்ஹாசன் நடிப்பில் வெளியான தேவர் மகனுக்கு பதிலடி தரும் வகையில் உதயநிதி நடிப்பில்,மாரி செல்வராஜ் மாமன்னன் படத்தை உருவாக்கி இருப்பதாக சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள தகவல்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இயக்குனர் மாரி செல்வராஜ் ”எனக்கு எமோஷனலா பட்ட ஒரு விஷயத்தை அவர் மீதான உரிமையோடு, என்னுடைய மூத்த கலைஞர், லெஜண்ட், சினிமாவின் அடையாளமான அவரிடம் கேட்கும்போது அது என் வாழ்க்கையின் நான் அடைந்த சாதனையாக பார்க்கிறேன். 30 வருடம் கழித்து, நான் இயக்குநர் ஆன பிறகும் எனது மாமன்னனை அவரிடம் காட்டிய பிறகு, அவர் எனக்கு பிறகு பேசப்போகிறார் என்றும் நம்பிக்கையான வார்த்தைகளை அவர் சொல்லப்போகிறார் என்ற நம்பிக்கையோடும் நான் பேசிய விஷயங்கள் வேறு மாதிரி பார்க்கப்படுகிறது என்பது வருத்தமாக இருக்கிறது” என்று விளக்கமளித்திருந்தார்.
இந்நிலையில் திரௌபதி, ருத்ரதாண்டவம் படங்களின் இயக்குநர் மோகன்.ஜி தனது ட்விட்டர் பக்கத்தில், தேவர் மகன் தமிழ் சினிமாவின் சிறந்த திரைக்கதைகளில் ஒன்று. 30 வருடங்கள் ஆகியும் இப்படி ஒரு ஆழமான தென் மாவட்ட கதையை இதுவரை யாரும் சொல்லாததே இந்த திரைப்படத்தின் தனித்தன்மை. எத்தனை பேர் குறை சொன்னாலும் காலத்தால் மறைக்க முடியாத காவியம் தேவர் மகன் என்று பதிவிட்டுள்ளார். இப்பதிவு மாரி செல்வராஜிற்கு எதிராக மோகன்.ஜி பதிவிட்டுள்ளதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்
இவ்விவகாரம் குறித்து அப்படத்தின் நாயகன் உதயநிதி ஸ்டாலினிடம் கேட்டபோது, “கமல்ஹாசன் நடிப்பில் வெளியான தேவர் மகனுக்கும், மாறி செல்வராஜ் இயக்கியுள்ள மாமன்னன் படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தேவர் மகன் படம் வெளியான நேரத்தில், அப்படம் குறித்து மாரி செல்வராஜ், கமல்ஹாசனுக்கு,அப்போது அவருக்கு தோன்றியதை ஒரு கடிதமாக எழுதி இருக்கிறார்.இது நடந்து பல ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், அதைப் பிடித்துக் கொண்டு, அப்போது ஏன் அப்படி எழுதினாய் என்று கேட்பது சரியா? மனிதர்கள் மாறுவதில்லையா?. 10 ஆண்டுகளுக்கு பின் பல விஷயங்கள் மாறி இருக்கிறது. 2008- ல் படத் தயாரிப்பில் இறங்கிய போது, சினிமாவில் நடிப்பீர்களா என கேட்டனர். அதற்கெல்லாம் சான்சே இல்லை எனக் கூறினேன். பின்னர் நடிகனாகவும் மாறினேன். அதைத் தொடர்ந்து 2016 ல் அரசியலுக்கு வருவீர்களா என கேட்டனர். இப்போது அரசியலுக்கு வந்து விட்டேன். அப்போ, ஏன் அப்படிச் சொன்னே. அப்படின்னு கேட்கலாமா?. காலங்கள் மாறுகிறது. ‘இந்தியன்- 2’ படப்பிடிப்பில் கமல் பிசியாக இருந்த நேரத்தில், மாமன்னன் படத்தை பார்த்து விட்டு, என்னையும், இயக்குனர் மாரி செல்வராஜையும் அழைத்து பாராட்டி விட்டுத்தான் ‘மாமன்னன்’ பாடல் வெளியீட்டு விழாவிற்கு வந்தார். அந்த விழாவில் கமல் முன்பாக ‘தேவர் மகன்’ தன்னை எப்படி பாதித்தது என இயக்குனர் மாரி செல்வராஜ் பேசினார். தவறாக அவர் எதையும் பேசவில்லை. அந்த விழாவில் கமல் சார் கூட, ‘மாமன்னன்’ படம் குறித்து பேசுகையில், ‘இப்படம் அனைவருடைய அரசியல்’ என மிகவும் தெளிவாகவே கூறிவிட்டார். சமூக வலைதளங்களில் யாரோ கொளுத்தி போட, அது பெரிதாக தெரிகிறது. யாரோ சண்டை போடணும்னே இதை கிளப்பி விட்டு இருக்காங்க. இவ்வாறு அவர் கூறினார்.வருகிற 29ஆம் வெளியாகவுள்ள இப்படத்தில்,உதயநிதிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, வடிவேலு, ஃபகத் பாசில், ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.