நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம் ‘ஆர் யூ ஓகே பேபி?’ . சமுத்திரக்கனி கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் அபிராமி, மிஷ்கின், முருக அசோக், பவல் நவநீதன், ரோபோ ஷங்கர், வினோதினி, லக்ஷ்மி ராமகிருஷ்ணன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ’மியூசிக் மேஸ்ட்ரோ’ இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்த நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக முடியும் தருவாயில் உள்ளது.
இது குறித்து லக்ஷ்மி ராமகிருஷ்ணன் கூறுகையில், ”‘ஆர் யூ ஓகே பேபி?’ எனது டாக் ஷோ தமிழ் பார்வையாளர்களுக்கு அர்ப்பணிக்கிறேன். இந்தப் படம் ஒரு குற்றத்தின் சமூக மற்றும் சட்ட அம்சங்களைப் பற்றிய விவாதமாக இருக்கும். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் கேரளாவில் நடைபெற்றது. படத்தின் தயாரிப்பு பணிகள் பல சவால்களுக்கு மத்தியில் நடந்தது. இது ஒரு சொல்லப்பட வேண்டிய கதை என்பதால் இந்த சவால்களை எதிர்த்துப் போராடி முடிக்க முடிவு செய்தோம்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றுவது ஒரு பெரிய பாக்கியம். அதுமட்டுமின்றி, மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா சாரின் இசை எங்கள் படத்திற்கு கிடைத்த பரிசு. அவரது இசை இந்தப் படத்தை வேறு ஒரு பெரிய தளத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது. தற்போது நாங்கள் படப்பிடிப்பை முடித்து விட்டோம். போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது” இவ்வாறு அவர் கூறினார்.
படத்தின் ஜானர் குறித்து கேட்டபோது, “இந்தப் படத்தை எந்த ஜானரிலும் வகைப்படுத்த முடியாது. வேண்டுமானால், இது கலவையான ஜானரைக் கொண்ட படம் என்று சொல்லலாம்” எனக் கூறியுள்ளார்.