கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கத்தின் சார்பில்,1,600 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஊக்க தொகையையும் சான்றிதழையும் வழங்கினார். அதை தொடர்ந்து நடந்த நிர்வாகிகள் சந்திப்பில் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் இரவு நேர பாடசாலை அமைப்பதாக அறிவித்தார்.
இந்நிலையில் காமராஜர் பிறந்த நாளான இன்று தமிழகம் முழுவதும் உள்ள அவரது சிலைக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் திரளாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதுடன் ஏராளமான இடங்களில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர்.
சென்னை பல்லவன் இல்லம் அருகே உள்ள ஜிம்கானா கிளப் காமராஜர் சிலைக்கு மாநில பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் விஜய் மக்கள் இயக்க கொடியுடன் வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியை தொடர்ந்து 234 தொகுதிகளிலும் ஏழை மாணவ-மாணவிகள் பயில இரவு பாடசாலை திட்டமான ‘தளபதி விஜய் பயிலகம்’ இன்று மாலை முதல் தொடங்கியது . சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகரில் விஜய் பயிலகம் தொடங்குவதற்கான பணிகள் முடிவடைந்த நிலையில் அங்கு இன்று மாலை தொடங்கியது . மாணவ-மாணவிகளுக்கு கல்வி பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்நிகழ்ச்சியை விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மாலை 6 மணிக்கு குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார், சென்னையை தொடர்ந்து கடலூர்,சேலம் தஞ்சாவூரிலும் இன்று மாலை விஜய் பயிலகம் இன்று தொடங்கியது .இதையடுத்து படிப்படியாக தமிழகம் முழுவதும் விஜய் பயிலகம் தொடங்கப்படும் என்கிறார்கள்.