மணிப்பூர் சம்பவத்துக்கு பிரதமர் பதில் சொல்லியே ஆக வேண்டும்! கொந்தளிக்கும் நடிகை ரோகிணி!!

 

மணிப்பூரில் நடந்து வரும் கலவரத்தின் ஒரு பகுதியாக கூகி பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. நாட்டையே உலுக்கிய இந்த மோசமான சம்பவத்தை கண்டித்து டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் மகளிர் காங்கிரஸார் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்விவகாரம் குறித்து நடிகையம் பாஜக பிரமுகருமான குஷ்பு, மணிப்பூர் விவகாரம் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த விஷயத்தை நினைத்து நாம் வெட்கித் தலைகுனிய வேண்டும். இந்த விவகாரத்தில் நாம் அனைவரும் அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து நடிகை ரோகிணி கூறியுள்ளதாவது,”ஒட்டு மொத்த நாடும் வெட்கப்படக்கூடிய அளவிற்கு ஒரு விஷயத்தை செய்து வைத்து இருக்கிறார்கள். பெண்ணை நிர்வாணமாக்கி, அவளை வன்புணர்வு செய்ததை நினைத்து நாம் அனைவரும் வெட்கப்பட வேண்டும்.

சம்பவம் நடந்து இத்தனை நாட்கள ஆன பிறகும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது மேலும் வெட்கப்படக்கூடிய விஷயமாகும்.இந்த சம்பவம் என்ன சொல்கிறது என்பதை நாம் யோசித்து பார்க்க வேண்டும்,

இந்த சமூதாயத்தில் பெண்ணின் உடல் மீது குடும்ப கௌரவத்தையும், சமூகத்தில் இருக்கிற அனைவரின் கௌரவத்தையும் புகுத்தி வைத்திருப்பதால் தான் இப்படி செய்யத் தோன்றுகிறது. பெண்களை நிர்வாணப்படுத்திவிட்டால், உங்கள் சமூகத்தை அவமதித்த மாதிரி நினைக்கிறார்.

அப்போ பெண்களின் உடல் அவமானத்தின் சின்னமாக இந்த சமூதாயம் உருவாக்கி வைத்து இருக்கிறது. பெண் உடல் மீது இந்த சமூதாயத்தின் பார்வையை களையும் போதுதான், பெண்களுக்கு விடுதலை கிடைக்கும். அதற்கு முன் இதுபோன்ற குற்றங்கள் நடந்தால், உடனடியாக அந்த இடத்தில் நிற்கவேண்டிய காவல்துறையினர் வேடிக்கைப்பார்த்துக் கொண்டு நிற்பது எந்த வகையில் நியாயம். இதற்கு சரியான பதிலை பிரதமர் மற்றும் அம்மாநில முதலமைச்சர் சொல்லியே ஆகவேண்டும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்