விஜய் மக்கள் இயக்க வழக்கறிஞர்கள் அணி ஆலோசனை கூட்டம்!

நடிகர் விஜய் நடத்தி வரும் “விஜய் மக்கள் இயக்கம்” அவரது அரசியல் பயணத்தின்  முன் எடுப்பாகவே கருதப்படுகிறது. நற்பணி மன்றம் மட்டும் நடத்தி வந்த விஜய், படிப்படியாக தனது விஜய் மக்கள் இயக்கத்தை கட்டமைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். விஜய் மக்கள் இயக்கம் மட்டுமில்லாமல் அதற்கு துணை அமைப்புகளையும் உருவாக்கி உள்ளார்.

இளைஞரணி, தொண்டரணி, மகளிர் அணி வழக்கறிஞர் அணி உள்ளிட்ட அணிகளை விஜய் கட்டமைத்து வருகிறார்.. இதனைத் தொடர்ந்து, மாவட்ட வாரியாக மக்கள் இயக்க நிர்வாகிகளை விஜய் சந்தித்து வருகிறார்.

மாவட்ட நிர்வாகிகளுக்கு, பூத் வாரியாக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதுபோக மாவட்டம்தோறும் படிவங்கள் கொடுக்கப்பட்டு, அந்தப் படிவங்களில், தொகுதிவாரியான தகவல்களையும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கேட்டுள்ளனர்.

ஒவ்வொரு மாவட்ட தலைவர்களும், மாவட்டம்தோறும், அனைத்து அணிகளையும் கட்டமைக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வரும் 5 ம் தேதி  விஜய் மக்கள் இயக்க வழக்கறிஞர்கள் அணியின் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட உள்ளதாகவும் அதை தொடர்ந்து 6 ம் தேதி  கேரள விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

பனையூர் இல்லத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அரசியல் பயணம் குறித்த ஆலோசனை செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.