பி.சி. ஸ்ரீராம் -சேரனுக்கு விருது வழங்கி கௌரவித்த நண்பன் குழுமம்!

நண்பன் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் நண்பன் கலை பண்பாட்டு ஆய்வு மற்றும் கருவூல மையம்’ஆகியவற்றின் தொடக்க விழா மற்றும் விருது வழங்கும் விழா சென்னையில் உள்ள வர்த்தக மையத்தில் கோலாகலமான உற்சாகத்துடன் நடைபெற்றது.

ஆகஸ்ட் 3 ஆம் தேதியன்று மாலை சென்னை  வர்த்தக மையத்தில் நண்பன் குழுமத்தின் சார்பில் நடைபெற்ற விருது வழங்கும் விழா, மஹதி அகாடமியில் பயிலும் மாணவ மாணவியர்களின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து டிரம்ஸ் இசை மேதை சிவமணி, வீணை இசை மேதை ராஜேஷ் வைத்யா, பியானோ இசை மேதை லிடியன் நாதஸ்வரம் ஆகிய மூவரும் இணைந்து இசை நிகழ்ச்சியை வழங்கினர். இதைத்தொடர்ந்து மேடை நகைச்சுவை கலைஞர்களான பாலா-குரேஷி இணை, மேடையேறி தங்களது அதிரடியான பகடித்தனமான பேச்சால் பார்வையாளர்களை கவர்ந்தனர்.  

இந்நிகழ்வையடுத்து நண்பன் குழுமத்தின் இணை நிறுவனரும், தொழிலதிபருமான நண்பன் மணிவண்ணன் விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றார். அவரின் வரவேற்புரையில், ” நான் நண்பன் குழுமத்தை பற்றிய ஒரு முக்கியமான விசயத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நண்பன் -யாருக்கு உதவி தேவைப்படுகிறதே.. அவர்களுக்கு எந்தவித நிபந்தனையும் இல்லாமல் முழு அன்புடன் உதவி கரம் நீட்டுகிறது.

நண்பன் குழுமம் கலை கலாச்சாரம் பாரம்பரியம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து, ஆதரவளிக்க திட்டமிட்டிருக்கிறோம். இதற்காகவே நண்பன் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் நண்பன் கலை மற்றும் கலாச்சார கருவூல மையம் எனும் புது முயற்சிகளை தொடங்கி இருக்கிறோம். ” என்றார்.

அவரைத் தொடர்ந்து நண்பன் குழுமத்தின் இந்தியாவிற்கான விளம்பர தூதுவரும், நடிகருமான ஆரி அர்ஜுனன் பேசுகையில், ” பிக் பாஸில் வெற்றி பெற்ற பிறகு என்ன செய்யப் போகிறோம்? என்ற மிகப்பெரிய கேள்வி என்னுள் இருந்தது. எனக்கான பொறுப்பினை எப்படி ஏற்றுக்கொண்டு பகிர்ந்தளிக்க போகிறேன் என்று வினாவும் இருந்தது. இந்த தருணத்தில் நண்பன் குழுமத்தினை‌ சேர்ந்த நரேன் ராமசாமி- என் நண்பர்- இந்த நண்பன் குழுமத்திற்கு அறிமுகப்படுத்தினார்.‌ 

கடந்த மூன்று ஆண்டுகளில் இவர் செய்த சேவைகள் வார்த்தைகளால் விவரிக்க இயலாது. அவர்கள் இங்கு மட்டுமல்ல பல நாடுகளுக்கும் உதவி செய்திருக்கிறார்கள். வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரிய கூடாது என்பார்கள். இவர்கள் இதுவரை தாங்கள் செய்ததை எந்த வடிவத்திலும் விளம்பரப்படுத்தவில்லை. நண்பன் குழுமத்தின் நிறுவனரான ஜி கே எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். 
பிக் பாஸிலிருந்து வெளியே வந்து இரண்டாண்டுகளாகிறது. கையில் பணம் இல்லை. இருந்தாலும் என் மூலமாக சமூகத்திற்கு என்ன செய்ய முடியும், என்பதைக் குறித்து யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
இந்த மேடை கலை மற்றும் கலைத்துறையில் பணியாற்றும் கலைஞர்களுக்கு முக்கியமான மேடை. நண்பன் குழுமம் கலைஞர்களுக்காக உருவாக்கிய அமைப்பின் முதல் நிகழ்வு. இதில் கலந்து கொள்வதற்கும், கலந்து கொண்டவர்களுக்கும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

அவரைத் தொடர்ந்து நண்பன் குழும நிறுவனர் ஜி கே பேசுகையில், ” நண்பன் குழுமம் -ஏராளமான சமூக விசயங்களுக்கு கரம் கொடுத்து ஆதரவளித்து வருகிறது. நண்பன் குழுமத்தை தொடங்குவதற்கு முக்கியமான காரணம் நண்பனிசம். நண்பனிசம் ஆண் பெண் என்ற பாலின பேதம் இல்லாமல் இருக்க வேண்டும்.

கின்னஸ் சாதனை புரிந்த நண்பர் குற்றாலீஸ்வரன் உள்பட.. இங்கு வருகை தந்திருக்கும் அனைவரும் நண்பர்கள் தான்.நண்பன் குழுமம்- லாப நோக்கில்லாமல் செயல்படும் அமைப்பு. இந்த குழுமத்திலிருந்து தற்போது நண்பன் என்டர்டெய்ன்மென்ட் என்ற புதிய அமைப்பை தொடங்கி இருக்கிறோம். லாப நோக்கமற்ற முறையில் செயல்பட்டு, நிதி ஆதாரத்தை திரட்டும் இந்த அமைப்பு,, முதலில் தமிழகத்திலும், அதன் பிறகு இந்தியாவிலும், அதனைத் தொடர்ந்து உலகளவிலும் எங்களால் இயன்ற உதவியினை தொடர்ந்து செய்யவிருக்கிறோம். எங்களுடைய அறக்கட்டளையை தமிழகம், இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம்… என தொடர்ந்து சேவைகளை செய்ய விரிவு படுத்தவும் திட்டமிட்டிருக்கிறோம்.
நண்பனிசம் எனும் கருத்தியலை தொடர்ந்து அனைத்து தரப்பினருக்கும் எடுத்துச் செல்வோம் ” என்றார்.

நண்பன் குழுமத்தின்  இண்டர்நேசனல் எண்டர்டெயின்மெண்ட் தலைவர் நரேன் ராமசாமி பேசுகையில், ”  நண்பன் நண்பனிசம்- எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல்.. எந்தவிதப் பிரதிபலனும் பாராமல்… நாம் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என நினைக்கிறோம் அல்லவா.. அதுதான் நண்பனிசம்..இந்த அமைப்பினை நலிவடைந்த கலைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கவும், அவர்களை ஊக்குவிப்பதற்காகவும் தொடங்கி இருக்கிறோம்..” என்றார்.

நடிகர் நாசர் பேசுகையில், ” நண்பனிசம்- விளக்கம் தேவையற்ற ஒரு தத்துவம். நட்பிற்கு விளக்கம் தேவையில்லை. அந்த ஒரு எளிய உறவை.. உணர்ச்சியை… உன்னதமான உணர்ச்சிகளாக்கி உலகம் முழுவதும் பரப்புகின்ற உங்களுக்கு இந்த அரங்கத்தில் உள்ள அனைத்து நண்பர்களின் சார்பாகவும் நட்பைக் காணிக்கையாக்குகிறேன்.

நண்பன் என்டர்டெய்ன்மென்ட் எனும் படத் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி வைப்பதைப் பெருமிதமாகக் கருதுகிறேன். எனக்கு அளிக்கப்பட்ட கௌரவமாக நினைக்கிறேன். நட்புடன் இருப்போம் நண்பர்களாகவே இருப்போம்.

இங்கு விருது பெற்ற கலைஞர்கள் அனைவரும் என்னுடைய நண்பர்கள் தான். நான் வாழ்க்கையில் என்ன ஆவேன் என தெரியாமல் இருந்த காலகட்டத்திலிருந்து என்னை வழிநடத்தியவர்கள். கவிஞர் அறிவுமதி, நான் படத்தை இயக்கும்போது அவராகவே முன்வந்து உதவி செய்தவர். பேராசிரியர் ராமசாமி அவருக்கும் எனக்குமான நட்பு புதிரானது. ஓவியர் டிராட்ஸ்கி மருது இல்லையென்றால் எனக்கு எழுதவே வந்திருக்காது. ” என்றார்.

விருது பெற்ற ஒளிப்பதிவாளர் பி. சி. ஸ்ரீராம் பேசுகையில், ” இங்கு வந்த பிறகுதான் தெரிந்தது நண்பன் என்ற ஆரோக்கியமான இடத்திற்கு வந்திருக்கிறோம் என்று. எனக்கு அளிக்கப்பட்ட விருது, இனி நான் செய்யவிருக்கும் பணிகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் இருக்கும் என நம்புகிறேன் நன்றி ” என்றார்.
இயக்குநர் சேரன் பேசுகையில், ” நாம் அனைவரும் சேர்ந்து தான் அரசாங்கத்தை உருவாக்கி இருக்கிறோம். நாம் எல்லோரும் சேர்ந்து அளிக்கும் பணத்தில் தான் அரசாங்கம் இயங்குகிறது. நமக்கு வேண்டியவற்றை அரசாங்கம் செய்து தருகிறது. அப்படிச் செய்ய முடியாத சில வேலைகளை நண்பர்களுடன் சேர்ந்து இந்தக் குழுமம் செய்கிறது. அதனால் இவர்கள் ஒரு குட்டி அரசாங்கம். நண்பர்கள் ஒன்றிணைந்து கூட்டு முயற்சியில் ஒரு அரசாங்கத்தை உருவாக்கிக் கொண்டு, தங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு உதவி செய்து வருவதும். சமூகத்துக்குத் தேவையான உதவி செய்து வருவதை வாழ்த்துவதிலும், வரவேற்பதிலும் கடமைப்பட்டிருக்கிறேன். மிக்க நன்றி. எனக்கு வழங்கப்பட்டிருக்கும் விருது பி.சி. ஸ்ரீராம்  சொன்னது போல், அடுத்தடுத்து தொடர்ந்து ஓடுவதற்கு அளிக்கப்பட்ட ஊக்க மருந்தாக எடுத்துக் கொள்கிறோம். நண்பன் குழுமம் அனைவருடனும் இணைந்து.. தொடர்ந்து பயணிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.

விழாவில், நண்பன் க்ராஃப்ட் மாஸ்டர்ஸ் விருது இயக்குநர் பாக்யராஜ்.ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், இயக்குநர் சேரன், கலை இயக்குநர் முதுதுராஜ், இயக்குநர் வெற்றிமாறன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

இதற்கு முன்னதாக கலை மற்றும் பண்பாட்டு துறையில் சிறந்த சேவை செய்துவரும் கலைஞர்களான  ஓவியர் ட்ராஸ்ட்கி மருது, பேராசிரியர் மு ராமசாமி, கவிஞர் அறிவுமதி, புரிசை கண்ணப்ப சம்பந்தம், பெரிய மேளம் கலைஞர் முனுசாமி ஆகியோருக்கு நண்பன் விருது வழங்கப்பட்டது- இதனை தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க தலைவர் தேனான்டாள் முரளி ராமசாமி, நடிகர் சங்க தலைவர் நாசர், ஒளிப்பதிவாளர் பி சி ஸ்ரீராம் ஆகியோர் வழங்கினர்.

இவர்களைத் தொடர்ந்து நண்பன் டேலண்ட் கேட்வே விருதினை அறிமுக படைப்பாளிகளான  கணேஷ் கே பாபு,  விக்னேஷ் ராஜா, விநாயக் சந்தரசேகரன்,  முத்துக்குமார், மந்திரமூர்த்திக்காக அருவி மதன் ஆகியோர் விருதினை பெற்றுக்கொண்டனர். இவர்களுக்கு இந்த விருதினை தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க தலைவர் தேனான்டாள் முரளி ராமசாமி, செயலாளர் கதிரேசன், நடிகர் சங்க தலைவர் நாசர், ஒளிப்பதிவாளர் பி சி ஸ்ரீராம், இயக்குநர் சேரன் ஆகியோர் வழங்கினர். விருதாளர்கள் அனைவருக்கும் விருதுடன் ஒரு இலட்ச ரூபாய் ரொக்கத் தொகையும் வழங்கப்பட்டது.