சாய்பாபா பிக்சர்ஸ் படநிறுவனம் சார்பில், இயக்குநர், நடிகர் ஜி. சிவா நடித்து தயாரித்துள்ள திரைப்படம் “ஓங்கி அடிச்சா ஒன்ற டன்னு வெயிட்டு டா” . இந்திய திரையுலகில் மிக அசாதாரண முயற்சியாக ஒரே ஒரு கதாபாத்திரம் பங்குபெறும் இப்படம் வரும் ஆகஸ்ட் 25 முதல் திரையரங்குகளில் வெளியாகிறது. பட வெளியீட்டை ஒட்டி படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களை இன்று சந்தித்தனர்.
இந்நிகழ்வினில்..இயக்குநர் மற்றும் நடிகர் ஜி. சிவா பேசியதாவது..,
இந்த தலைப்பை வைத்ததற்கு பல விமர்சனங்கள் சந்தித்தேன், இந்த படத்திற்கு நான் வைத்திருந்த தலைப்பு ‘நூறு கோடியில் ஒருவன்’ ஆனால் அந்த தலைப்பை நான் கேட்டு பெறுவதற்கு முன்னர் அந்த படமே வெளியாகி விட்டது. நான் சூர்யா சாரின் மிகப்பெரிய ரசிகன் அவருடைய படத்தில் வந்த வசனத்தை இப்படத்திற்கு தலைப்பாக வைத்தது பெருமையாக உள்ளது, இந்தப் படத்தின் தலைப்பிற்கு காரணம் கதையின் அழுத்தம் தான். இந்தப் படம் பொது மக்களுக்கு ஒரு நல்ல சமூக கருத்தை சொல்லும் படமாக இருக்கும். படத்தில் எந்த ஒரு பாகுபாடும் இல்லாமல் எந்த ஒரு விட்டுக் கொடுத்தலும் இல்லாமல் இதனை உருவாக்கியுள்ளோம்,
படத்தில் சண்டைக்காட்சிகள் பிரமாதமாக வந்துள்ளது.நான் பெருமைக்காக சொல்லவில்லை, நான் ஒருவனாக தனியாக சண்டை போடுவது உங்களுக்கு சலிப்பாக இருக்கும் என எண்ணலாம், ஆனால் அப்படி இருக்காது. சண்டை பயிற்சியாளர் இந்தப் படத்திற்கு பெரிதும் உதவியாக இருந்தார், தனி ஒருத்தர் சண்டை போடுவது எளிது ஆனால் அதை படமாக மாற்றுவது கடினம் அதற்கு அவருக்கு பெரிய பாராட்டுகள். ஒளிப்பதிவாளர் இப்படத்தில் மிகப்பெரிய உழைப்பை கொடுத்துள்ளார்,
நானும் அவரும் பல இடங்களில் சிரமப்பட்டு இப்படத்தை உருவாக்கினோம், பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய ஆதரவு, இது போன்ற படங்களில் மக்களை வேறு சிந்தனைக்கு செல்ல விடாமல் இருக்க உதவுவது இசை தான்
இப்படத்தில் அது அருமையாக வந்துள்ளது. இந்தப் படத்தில் ஆரம்பம் முதல் இன்று வரை எனக்கு உறுதுணையாக இருந்தது என் அம்மாதான், எனக்கு உதவியாக சினிமாத்துறையில் யாரும் இல்லை எனக்கு நண்பர்கள் தான் உதவினார்கள்,
இந்தப் படத்தில் சிவன் உருவம் வந்தது பற்றி பலரும் என்னிடம் விமர்சனம் வைத்தனர், நான் தவறான நோக்கத்தில் அதை செய்யவில்லை மக்களிடம் நல்ல விஷயங்களை கொண்டு செல்ல வேண்டும் என்றுதான் நான் அதை செய்தேன், இவ்வாறு அவர் பேசினார்