‘பிதாமகன்’,’கஜேந்திரா’ படத்தயாரிப்பாளர் வி.ஏ.துரை காலமானார்!
பிரபல திரைப்பட தயாரிப்பாளர் வி.ஏ.துரை (வயது 69). இவர் பாலாவின் இயக்கத்தில்,விக்ரம், சூர்யா நடிப்பில் வெளியான பிதாமகன், விஜயகாந்தின் கஜேந்திரா, என்னம்மா கண்ணு உள்ளிட்ட படங்களை தயாரித்தவர். அதேபோல் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘பாபா’ திரைப்படத்தின் தயாரிப்பு பணிகளிலும் இவர் முக்கிய பங்காற்றியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட வி.ஏ.துரை,கடந்த சில ஆண்டுகளாக நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, வறுமையில் வாடி வரும் தனக்கு மருத்துவ உதவி செய்ய வேண்டும் என திரைத்துறையினர்களுக்கும், நடிகர்களுக்கும் வேண்டுகோள் விடுத்து இருந்தார். அதனைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த், ராகவா லாரன்ஸ், சூர்யா, கருணாஸ் உள்ளிட்ட நடிகர்கள் அவருடைய சிகிச்சைக்காக உதவி செய்தனர். இந்நிலையில் நீரிழிவு நோய் பாதிப்பு அதிகரித்ததால் சமீபத்தில் அறுவை சிகிச்சை மூலம் அவரது ஒரு கால் அகற்றப்பட்டது.இதையடுத்து சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்த வி.ஏ.துரை சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 9 மணியளவில் உயிரிழந்துள்ளார்.
இவருக்கு விஜயலட்சுமி, லட்சுமி என்று இரண்டு மனைவிகள் உள்ளனர்.முதல் மனைவிக்கு ஸ்ருதி, சிந்து என்று இரண்டு மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் நடந்துவிட்டது.இரண்டாவது மனைவிக்கு கீர்த்தனா என்ற ஒரு மகள் இருக்கிறார்.வி.ஏ. துரையின் உடல் பொதுமக்கள் பார்வைக்காக வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது
அவரது இறுதி சடங்கு இன்று மாலை 3 மணி அளவில் நடத்தப்பட்டு,,போரூர் மின் மயானத்தில் தகனம் நடந்தது.. தயாரிப்பாளர் வி.ஏ.துரையின் மறைவுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.