‘சீயான்’ விக்ரம் நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள புதியபடம் ‘தங்கலான்’. ஒவ்வொரு படத்திலும் அந்த கதாபாத்திரமாகமாகவே மாறிவிடும் விக்ரம், அதற்காகவே ரொம்பவே மெனக்கெடுவது வழக்கம். ‘தங்கலான்’ படத்திலும் வழக்கம் போலவே தனது உடல் தோற்றத்தை சிகையலங்காரத்தை முற்றிலுமாக மாற்றி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் . ‘
கே.ஜி.எஃப் எனப்படும் கோலார் தங்க சுரங்கத்தில் பணியாற்றிய தொழிலாளர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள தங்கலான் படத்தில் விக்ரமுடன் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கும் இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு கர்நாடகா மாநிலத்தில் உள்ள கேஜிஎஃப்பில் நடத்தி முடிக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்ட வேலைகள் நடந்து வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 26-ம் தேதி வெளியாகும் என படக்குழு சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், படக்குழு தற்போது இப்படத்தின் டீசரை வெளியிட்டுள்ளது.
இரத்தப் போர்கள் சுதந்திரத்திற்கு வழிவகுக்கும் என்று ரத்தம் தெறிக்க தெறிக்க வெளியாகியுள்ள டீசரில், பிரமாண்ட போர்க்கள காட்சிகள், தன்னை ஆக்ரோஷத்துடன் தீண்ட வரும் பாம்பை கண்களில் அனல் பறக்க,ஆவேசத்துடன் இரு துண்டுகளாக பிய்த்து எறியும் விக்ரம் என ஒவ்வொரு காட்சிகளும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏகத்துக்கும் எகிற செய்துள்ளது.இப்படத்தின் டீசர் வெளியான 2 மணி நேரத்தில் 2 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது