டிரான்ஸ் இந்தியா மீடியா நிறுவனம் தற்போது சிறு இடைவெளிக்குப் பிறகு தமிழில், “சார்லி சாப்ளின்” வெற்றிக்கூட்டணியான பிரபுதேவா, ஷக்தி சிதம்பரம் கூட்டணியில் ஒரு படத்தை உருவாக்கியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு தென்காசி, கொடைக்கானல், உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும், பிரம்மாண்டமான சண்டைக் காட்சிகள் மற்றும் பாடல் காட்சிகள் சென்னையிலும் படமாக்கப்பட்டது.
மிகவும் வித்தியாசமான .. இந்திய சினிமாவில் இதுவரைக்கும் வெளிவராத கதை அமைப்புடன் இப்படம் தயாராகியுள்ளது. ஷக்தி சிதம்பரம் பிரபுதேவா கூட்டணியில் ஏற்கனவே வெளியான “சார்லி சாப்ளின்” திரைப்படம் எப்படி ஒரு வித்தியாசமான கதை களத்துடன் வெளிவந்ததோ, அதேபோல் இப்போது உருவாகியுள்ள திரைப்படமும் பெரிய வரவேற்பை பெறும் என்கிறது படக்குழு.இப்படம் குறித்து இயக்குநர் ஷக்தி சிதம்பரம் கூறியதாவது, “இப்படத்தின் கதைக்காக இரண்டு வருடங்கள் எடுத்துக் கொண்டேன். எழுதும் போது வரிக்கு வரி வித்தியாசமும், சுவாரஸ்யமும் இருக்க வேண்டும், ரசிகர்களுக்கு ‘ Full மீல்ஸ் ’ கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்திலே எழுதினேன்.
இரண்டு வருடமாக செதுக்கி முடித்த திரைக்கதையோடு பிரபுதேவாவிடம் சென்றேன். கதையை முழுதுவமாக கேட்ட அவர், தன்னுடைய எல்லா கமிட்மெண்ட்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு இப்படத்திற்கு தன்னை முழுமையாக ஒப்படைத்தார். “என் திரைவாழ்வில் இப்படம் மைல்கல்” எனவும் சொல்லி உற்சாகப்படுத்தினார். உடனே தயாரிப்பாளர் ராஜேந்திர ராஜன் அவர்களை மும்பை சென்று சந்தித்தேன். தமிழ்நாட்டில் பிறந்து வடநாட்டில் கன்ஸ்ட்ரக்ஷன் தொழிலில் வெற்றிக்கொடி நாட்டிய தொழிலதிபர் அவர். அவர் ஏற்கனவே ’நாகேஷ் திரையரங்கம் ’ என்ற படத்தை தயாரித்திருந்தார். மேலும் மராட்டியில் ஒரு படமும் தமிழில் ஒரு படமும் தயாரிப்பில் இருந்தது.
இந்நிலையில் அவர் ”புதியபடம் தயாரிக்கும் திட்டம் இல்லை” என்றே சொன்னார். “நீங்கள் படம் தயாரிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை; கதையை கேளுங்கள்” என்றதும் கதை கேட்க துவங்கினார். இரண்டு மணிநேரம் நான் கதை சொல்லி முடிக்கவும் பெரும் உற்சாகம் அடைந்தார். “உடனடியாக மற்ற ப்ராஜெக்ட்களை நிறுத்தி வைத்துவிட்டு, இதைத் துவங்கலாம்” என்றார்.
இப்படத்தில் ”பிரபுதேவா, மடோனா செபாஸ்டியன், யாசிகா ஆனந்த், அபிராமி, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, ஒய்.ஜி..மகேந்திரன், ஜான் விஜய், ’ஆடுகளம்’ நரேன், மதுசூதனராவ், ’ரோபோ’ சங்கர், சாய் தீனா, எம்.எஸ்.பாஸ்கர், ‘டாக்டர்’ சிவா, ‘கல்லூரி’ வினோத், கோதண்டம், ‘ஆதித்யா’ கதிர், ஆதவன், ‘தெலுங்கு’ ரகுபாபு, புஜிதா பொன்னடா, மரியா, அபி பார்கவன், என பெரும் நட்சத்திரப்பட்டாளமே நடித்துள்ளது.இது மக்களுக்கான படம்.. அதனால் படத்தின் டைட்டிலே மக்களே வைக்கலாம் என முடிவு செய்துள்ளோம். அது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்” என்கிறார்.
இப்படத்தின் ஒளிப்பதிவை கணேஷ் சந்திரா மேற்கொள்ள , இளம் இசை அமைப்பாளர் அஸ்வின் விநாயகமூர்த்தி இசையமைத்து வருகிறார்.