திருப்பூர் சுப்பிரமணியம் “திடீர்” ராஜினாமா!
தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவராக பதவி வகித்து வந்த திருப்பூர் சுப்ரமணியம்.அப்பொறுப்பிலிருந்து திடீரென விலகியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,“எனது சொந்த வேலை காரணமாக சங்கத் தலைவர் பதவிலியிருந்து ராஜினாமா செய்கிறேன். இதுவரை ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி” என கூறியுள்ளார்.
விஜய் நடித்த லியோ திரைப்படம் வெளியான போது, லியோ படத் தயாரிப்பாளர் சொன்ன வசூல் விவரங்கள் அனைத்தும் பொய், உண்மையில் தியேட்டர் காரர்களுக்கு நஷ்டம் என அவர் அளித்த பேட்டி திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் விஜய் ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சித்து வந்தனர்
இந்நிலையில், தீபாவளிக்கு வெளியான டைகர் 3 படத்தை திருப்பூர் சுப்ரமணியத்திற்கு சொந்தமான தியேட்டரில் அரசின் உரிய அனுமதி இன்றி காலை 7 மணிக்கும் இரவு 11.50க்கு காட்சி திரையிட்டதாக நெட்டிசன்கள் ட்விட்டரில் ஆதாரத்துடன் புகார் கூறினர். இதையடுத்து தமிழக அரசின் வருவாய் துறை அதிகாரிகள் அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தனர்.
இந்நிலையில் இது குறித்து திருப்பூர் சுப்ரமணியம், “சிறப்புக் காட்சி தொடர்பான தமிழக அரசின் விதிகள் இந்திப் படத்துக்கு பொருந்தாது என நினைத்து காலை சிறப்பு காட்சியை திரையிட்டுவிட்டனர்” என விளக்கமளித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில்,தமிழ்நாடு திரையரங்க மற்றும் மல்டிப்ளக்ஸ் உரிமையாளர் சங்கத் தலைவராக இருந்த திருப்பூர் சுப்ரமணியம் அப்பொறுப்பிலிருந்து விலகியுள்ளார்.