நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு வர உள்ளார் என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாவிட்டாலும், அதற்கான ஆயத்தப்பணிகள் தொடர்ந்து முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அவரது இயக்கத்தின் இளைஞர் அணி, மகளிர் அணி, வழக்கறிஞர், மருத்துவர் அணி மற்றும் மாணவர்களுக்கு கல்வி விழா விருது என ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
மேலும் நடிகர் விஜய்யின் முழு டார்கெட் மாணவர்கள் தான் என்கிறார்கள்.கடந்த ஜூன் மாதம் தனது பிறந்தநாளை ஒட்டி, தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் இருந்து தொகுதி வாரியாக முதல் மூன்று மதிப்பெண் எடுத்த 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ மாணவிகளை நேரில் அழைத்து அவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார். குறிப்பாக 12-ம் வகுப்பு தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு வைர நெக்லஸை பரிசாக வழங்கியதும் குறிப்பிடத்தக்கது .
அவர்களின் வாக்குகளை கைப்பற்றவே அவர் முனைப்பு காட்டி வருகிறார். குறிப்பாக விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் தொடங்கப்பட்ட இரத்ததான மையம், விஜய் விழியகம், விஜய் பயிலகம், விஜய் மினி கிளினிக் உட்பட பல நல்ல விஷயங்கள் பொது மக்களுக்கு செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது அடுத்த கட்டமாக விஜய் நூலகம்,தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் நூலகம் அமைக்கப்பட உள்ளது.
இதில், சமூக சிந்தனையாளர்கள், சாதனையாளர்கள், சட்ட ஆலோசனை, தமிழர் வரலாறு, சிறுவர்களுக்கான புத்தகம், இலக்கியம்.மற்றும் கல்வி சம்பந்தமான புத்தகங்களும் இடம்பெற உள்ளது இதன் முதல் கட்டமாக நாளை சென்னை,தாம்பரம், கிருஷ்ணகிரி.வேலூர்,அரியலூர் நாமக்கல் உள்ளிட்ட 11 இடங்களில் நூலகம் திறந்து வைக்கப்படவுள்ளது
இது குறித்து விஜயமக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,”விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தளபதி விஜய் பயிலகம் திட்டத்தினை தொடர்ந்து மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில்!
புத்தக வாசிப்பு திறன் மற்றும் பொதுஅறிவு சிந்தனை வளர்க்கும் நோக்கில் தற்போது முதற்கட்டமாக “தளபதி விஜய் நூலகம்” திட்டம் நாளை சனிக்கிழமை (18/11/2023) அன்று காலை 10.35 மணியளவில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட தொண்டரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தாம்பரம் தொகுதி பாலாஜி நகர் 3-வது தெரு, CTO காலனி, மேற்கு தாம்பரத்தில் அகில இந்திய பொதுச் செயலாளர் திரு.புஸ்ஸி.N.ஆனந்து அவர்கள் துவக்கி வைக்கிறார்.
அதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு மேற்கு மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக பல்லாவரம் தொகுதியில் தாம்பரம் மாநகராட்சி மும்மூர்த்தி நகர் 5-வது தெருவில் “தளபதி விஜய் நூலகம்” திட்டத்தினை துவக்கி வைக்கிறார்.
அதேபோன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மூன்று இடங்களிலும், அரியலூர், நாமக்கல் மேற்கு, சென்னை கிழக்கு, வடசென்னை கிழக்கு, வடசென்னை வடக்கு இளைஞரணி மற்றும் வேலூர் தொண்டரணி ஆகிய மாவட்டங்களை சேர்த்து 11 இடங்களிலும் தளபதி விஜய் நூலகம் திறக்கப்பட உள்ளது.
மேலும் இரண்டாம் கட்டமாக வருகின்ற 23.11.2023 (வியாழக்கிழமை) அன்று திருநெல்வேலி மாவட்டத்தில் ஐந்து இடங்களிலும், கோவை மாவட்டத்தில் நான்கு இடங்களிலும் ஈரோடு மாவட்டத்தில் மூன்று இடங்களிலும் தென்காசி மாவட்டத்தில் இரண்டு இடங்களிலும் சேலம், புதுக்கோட்டை, கரூர், சிவகங்கை, திண்டுக்கல் மேற்கு, கன்னியாகுமரி மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களை சேர்த்து 21 இடங்களிலும் தளபதி விஜய் நூலகம் திறக்கப்பட உள்ளது என்பதனை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.