தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவு காரணமாக வீட்டில் இருந்தபடியே சிகிச்சை எடுத்து வருகிறார். அவ்வப்போது வெளிநாடு சென்றும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு வருகிறார். இதன் காரணமாக பொதுவெளியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை குறைத்துக் கொண்டு விட்டார்.
தேமுதிக கட்சிக் கூட்டங்களில் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்தே பங்கேற்று வருகிறார்.இந்நிலையில் கடந்த 18ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மார்புச் சளி, இடைவிடாத இருமல் காரணமாக விஜயகாந்த், சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே பல்வேறு உடல் உபாதைகள் இருப்பதால் உடல்நிலை மற்றும் உறுப்புகளின் செயல்பாட்டை துல்லியமாக கண்காணிப்பதற்காக ஐசியூவில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில்,இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை என தனியார் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ விஜயகாந்தின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. எனினும் கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என்று நம்புகிறோம். அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.