சென்னை தீவுத்திடலில் பொது மக்கள் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த விஜயகாந்தின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த் அங்கிருந்த செய்தியாளர்களிடம் கூறியதாவது, “நான் இப்போதுதான் கன்னியாகுமரியில் இருந்து வருகிறேன்; நேற்றே வரவேண்டியது, முடியாமல் போய்விட்டது. விஜயகாந்த் பற்றி சொல்வதற்கு நிறைய இருக்கிறது. முக்கியமாக ஒன்று சொல்ல வேண்டும் என்றால் நட்புதான்; நட்புக்கு இலக்கணமாக இருந்தவர் விஜயகாந்த். அவருடன் ஒருமுறை பழகிவிட்டால் வாழ்கை முழுவதும் நம்மால் மறக்கவே முடியாது.
அன்புக்கு அடிமை என்று சொல்வார்கள்; அதனால்தான் விஜயகாந்திற்கு அதிக நண்பர்கள்; அவருக்காக உயிரை கொடுக்கும் அளவுக்கு இருந்தார்கள்; இருக்கிறார்கள். நண்பர்கள், அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள் ஆகியோர் மீது கோபப்படுவார். ஆனால் யாருக்கும் அவர்மீது கோபம் வராது. ஏனென்றால், விஜயகாந்தின் கோபத்தில் நியாயம் இருக்கும். அன்பு இருக்கும், சுயநலம் இருக்காது. தைரியத்திற்கும் வீரத்திற்கும் இலக்கணமானவர்.எனக்கு உடல்நிலை சரியில்லாத போது ராமச்சந்திரா மருத்துவமனையில் சுயநினைவு இல்லாமல் இருந்தேன். அப்போது நிறைய மக்கள், பத்திரிகையாளர்கள் கூட்டம் அதிகமாக திரண்ட நிலையில் ஒன்றுமே செய்யமுடியாத நிலை ஏற்பட்டது.
அந்த சமயத்தில் விஜயகாந்த் என்ன செய்தார் என்று தெரியவில்லை, எல்லாரையும் பேசி அனுப்பி வைத்து விட்டு எங்கள் வீட்டாரிடம், அண்ணனோட ரூம் பக்கத்தில் எனக்கும் ஒரு ரூம் போடுங்க நான் பாத்துகிறேன் அண்ணன என்று கூறியுள்ளார். அது என்னால் மறக்கவே முடியாது .
“நடிகர் சங்கத்தில் இருந்து சிங்கப்பூர் மலேசியா கலைநிகழ்ச்சிக்காக சென்றிருந்தோம். நிகழ்ச்சி எல்லாம் முடித்துவிட்டு வரும்போது மற்ற கலைஞர்கள் அனைவரும் பஸ்ஸில் ஏறிவிட்டனர். நான் வரும்போது நேரமாகிவிட்டது. ரசிகர்கள் எல்லாம் என்னை சூழ்ந்துவிட்டார்கள்; 5 நிமிடத்திற்கு என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை; கூட இருக்க பவுன்ஸர்களாலும் கூட ஒன்றுமே செய்யமுடியாமல் திண்டாடினார்கள். அதையெல்லாம் பஸ்ஸில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த விஜயகாந்த், கூட்டத்திற்குள்ளே வந்து அவரது தோளில் இருக்கும் துண்டை வைத்து எல்லாரையும் அடித்து விரட்டி, என்னை மீட்டு ‘பூ’ மாதிரி கொண்டு வந்து பஸ்சில் உட்காரவைத்து அண்ணா உங்களுக்கு ஒன்னுமில்லையே என்று கேட்டார்.
அந்தமாதிரி இருந்த ஒரு ஆள கடைசி நேரத்தில் இப்படி பார்க்கும் போது ரொம்ப கஷ்டமாக இருந்தது. 71 பால்தான், அதுக்குள்ள பல சிக்ஸர்கள், பல ஃபோர்கள் அடித்து நூற்றுக்கணக்கான ரன்களை குவித்து, மக்களை மகிழ்வித்து தற்போது விக்கெட்டை இழந்துவிட்டு உலகம் என்கிற ஃபீல்டை விட்டு போய்ட்டார். கேப்டன் என்பது பொருத்தமான பெயர். வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி மக்கள் மனதில் யார்? விஜயகாந்த் தான். வாழ்க விஜயகாந்த்!” இவ்வாறு அவர் கூறினார்