ஆண்டாள் திருப்பாவையை விவரிக்கும் மால்யத் என்ற புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது இந்நிகழ்வில் பங்கேற்ற இளையராஜா பேசுகையில், ““கர்நாடக சங்கீதத்தில் நான் கைதேர்ந்தவன் இல்லை. அதனால் இசைஞானி என்ற பட்டத்துக்கு நான் தகுதியானவனா என்பது பெரிய கேள்விக்குறிதான். ஆனால் மக்கள் என்னை இசைஞானி என அழைக்கிறார்கள். அதற்கு நான் வணங்குகிறேன்.
அதனால் எனக்கு எந்த கர்வமும் கிடையாது. நான் பல்வேறு விழாக்களில் ஹார்மோனியம் வாசித்தபோது மக்கள் கைத்தட்டி ஊக்கம் கொடுப்பார்கள். அந்த கைத்தட்டல் யாருக்கு கிடைக்கிறது என்ற சந்தேகம் ஒருகட்டத்தில் எனக்கு எழுந்தது. நான் இசைத்த பாடல்களுக்கான மெட்டினை அமைத்தவருக்கு கைத்தட்டல் கிடைக்கிறது என்று எனக்கு புரிந்தது. அதனால் கர்வத்திலிருந்து நான் எப்போது வெளியே வந்துவிட்டேன்.
எனவே எந்த புகழும் பாராட்டும் எனக்கு ஒட்டாது. உண்மையில் அது குறித்த சிந்தனையே எனக்கு கிடையாது.மூன்று நாட்களில் மூன்று படங்களுக்கு பின்னணி இசையமைத்த இசையமைப்பாளர் உலகத்திலேயே நான் மட்டும்தான். ஆனால் இப்போதெல்லாம் இசையமைக்க 6 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார்கள் . சிலரோ ஒரு வருடம் எடுத்துக்கொள்கிறார்கள். ஏன் என்றால் அது அவர்களுக்கு வரவில்லை என்பதுதான் காரணம்” என்றார். அவரது இந்தப் பேச்சுக்கு சமூக வலைதளங்களில் ஆதரவும், விமர்சனமும் எழுந்துள்ளது.