‘வடக்குப்பட்டி ராமசாமி’தயாரிப்பாளருக்கு நிச்சயம் வெற்றிக் கொடுக்கும்!-நடிகர் சந்தானம்.

 

பீப்பிள் மீடியா ஃபேக்டரி, விஸ்வ பிரசாத் தயாரிப்பில் கார்த்திக் யோகி இயக்கத்தில் நடிகர்கள் சந்தானம், மேகா ஆகாஷ் நடித்துள்ளத் திரைப்படம் ‘வடக்குப்பட்டி ராமசாமி’. பிப்ரவரி 2ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

நிகழ்வில் நடிகர் சந்தானம் பேசியதாவது, “பீப்பிள் மீடியா ஃபேக்டரி தெலுங்கில் நிறைய படங்கள் செய்திருக்கிறார்கள். தமிழிலும் இரண்டு படங்கள் செய்திருக்கிறார்கள். அதில் முதல் படமாக ‘வடக்குப்பட்டி ராமசாமி’ வெளியாகிறது. 65 நாட்களும் இந்தப் படத்தின் படப்பிடிப்பை எந்தப் பிரச்சினையும் இல்லாமல் நேர்த்தியாக செய்து கொடுத்தார்கள். என்னை நம்பி இவ்வளவு பெரிய படம் எடுத்துள்ள விஸ்வா சாருக்கு நன்றி. ‘கே.ஜி.எஃப்’ எடுக்கும்போது நூறு கோடி ரூபாய் பட்ஜெட்டிற்கு யஷ் பெரிய ஹீரோவா என்றால் அப்போது இல்லை. ஆனால், அந்தக் கதையை நம்பி அந்தப் படம் எடுத்தார்கள். இதேதான், ‘பாகுபலி’ பிரபாஸூக்கும். அதுபோலதான், இந்தக்கதையை தயார் செய்துவிட்டு நாங்கள் தயாரிப்பாளர்களிடம் சென்றபோது, ‘சந்தானத்துக்கு இவ்வளவு பெரிய பட்ஜெட்டா’ எனப் பலரும் தயங்கினார்கள். ஆனால், இந்தக் கதையை மட்டுமே நம்பி பீப்பிள் மீடியா ஃபேக்டரி விஸ்வா சார் வந்தார். எனக்கு இதுதான் பெரிய முதல் பட்ஜெட் படம். கதையை நம்பிய தயாரிப்பாளர்கள் எப்போதுமே தோற்றதில்லை. இந்தப் படம் தயாரிப்பாளருக்கு நிச்சயம் வெற்றிக் கொடுக்கும். கார்த்திக் இந்தக் கதையை நேர்த்தியாக செய்திருக்கிறார். தியேட்டரில் பார்க்கும் போது நிச்சயம் மகிழ்வீர்கள். படம் நீங்கள் பார்த்துவிட்டு சொல்லுங்கள். இவ்வாறு அவர் பேசினார்